BREAKING NEWS

Like Us

Monday, March 28, 2011

ஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 1

ஏராளமான சம்பவங்களையும் , அனுபவங்களையும் தந்திருந்தது சென்ற மாதம் போன இந்திய பயணம். பயணக் கட்டுரை ஒன்றாக எழுதவேண்டும் என்று பல விடயங்களை நினைத்து வைத்திருந்தேன்.  பிஸியான எக்ஸாம் மாதம் இது , வேறு வேலைகளும் வந்து சூழ்ந்து கொண்டதால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. சம்பவங்களை நினைத்து பார்க்கின்ற பொது பல விடையங்களும் நினைவில் இல்லை .  ஆனால் சில மனிதர்களும் அவர்களின் முகங்களும் அப்படியே நினைவில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது , நாட்கள் பல கடந்தும் கூட.   

அப்படி இன்றும் நினைவில் நிற்கும் சில மனிதர்களை பதிகிறது இந்தப்ப் பதிவு. எமது  இரண்டாம்  நாள் பயணம், ஒரு மாலையில்  தஞ்சாவூரிலிருந்து ஆரம்பித்து ராமநாத புரத்தில் தங்குவதொடு முடிவடைகிறது, அடுத்த நாள் ராமேஸ்வரம் பார்ப்பதாக ஏற்பாடு.  காலையிலேயே பாம்பன் பாலத்தையும் தாண்டி ராமேஸ்வரம் சென்றோம்.. 

எனக்கும் டிரோஷனுக்கும் எம் மதம் சார்ந்த நம்பிக்கைகளிலும் சம்பிரதாயங்களிலும் அவ்வளவு உடன்பாடு இல்லை .  ஆனாலும் ராமேஷ்வரம் வரை போய் தீர்த்தம் ஆடாமல் வந்தனியோ எண்டு அம்மா பேசுவா, அதை விட நாம் செய்த பாவம் எல்லாம் தீரும் எண்டு யாரோ  ஒலிபெருக்கியில் கூவிக்கொண்டு இருந்தார்கள் . 

சரி ஆடிப்பார்த்திடுவோம், தீர்த்தத்தை எண்டு நினைக்கு போதே  பல மனிதர்கள் வாளிகளுடன் எங்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்டார்கள். 
ஒரு தடியன் எல்லோரையும் மீறி எங்களை ஆக்கிரமித்து கொண்டான். . அவன்தான் எங்கள் பாவங்களை போக்க  வாளியோடு வந்த GUIDE . GUIDE இல்லாமலும் பாவங்களை போக்க முடியாது எண்டு பிறகு தான் விளங்கியது.


நாங்கள் காவி வேட்டி வாங்கி கொண்டோம்.. அங்குதான் அறிமுகமாகிறாள் அவள். வேட்டிக்கு காசு கொடுத்த போதே.. எனக்கு தந்திட்டு போங்க என்று மெல்லிய குரலில் இரந்து கொண்ட அவளுக்கு  இருபது  இருபத்திரண்டு வயதிருக்கலாம்,  வறுமையில் வாடிய அவளின் ஒட்டிய  முகம் ,நிறையவே சோகத்தை சுமந்திருந்தது. கண்கள் கண்ணீருக்கு பழக்கப்பட்டிருந்தது. தயங்கி தயங்கி   இரந்த அவள் தொழிலுக்கு புதிது என்பது தெளிவாகவே விளங்கியது. பேச்சால் ஆக்கிரமித்து கொள்ளும் இந்திய மனிதர்களின்  பண்பு அவளிடம் இல்லை. தயக்கம்  தெரிந்தது.சரி உனக்கு தான் தருவம் எண்டு சேர் வாக்கு கொடுத்தார்.

பின்னர் கடலுக்கு போனோம் நீராடினோம். கோவிலுக்கு திரும்பும் வழியில் அவள்  நின்றாள், எங்கள் வேட்டியையும் எங்களையும் பார்த்துக் கொண்டாள். அந்த பார்வை இன்னும் கண்களுக்குள் நிற்கிறது. எதோ ஒரு  வலி,  ஏக்கம், ஏமாற்றம் கலந்த அப்பாவியான அந்த பார்வை ஆயிரம் எண்ணங்களை காட்டி நின்றது. " நில்லு என்ன,  கோயிலுக்க போட்டு வாறம்" என மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை கொடுத்தார் சேர்.

வாளியோடு வந்த தடியன், கோயிலுக்குள் ஒவ்வொரு தீர்த்தமாய் கூட்டிச்சென்றான்..ஒவ்வொரு தீர்த்தத்தின் அருமை பெருமைகளை கூறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாளி தண்ணீர் கிணத்தில் இருந்து அள்ளி ஊத்தினான். இருபத்திஒரு தீர்த்தம் இருப்பதாக  சொன்னான். ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான சுவை , உஷ்ணம் இருப்பதாக கூறினான். நான் குடித்து பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன்.    அவனோடு விறு விறு என்று நடந்து  இருபத்தி ஒரு கிணறுகளில் தீர்த்தமாடியது  புதுமையாய்  இருந்தது.

கடைசியாய் கோடி தீர்த்தம் என்று ஒண்டு. " கோடி தீர்த்தம் கோடி புண்ணியம்" என்று எழுதி ஒட்டியிருந்தார்கள்.  கோடி தீர்த்தம் குறைவாக தான் கிடைக்கிறது ஒரு கிண்ணத்தில் பிடித்து முகத்தில் வீசி அடித்தான் ஒருவன்.  நகருங்க சார் நகருங்க என்று விரட்டி அடித்தான் இன்னொருவன். 

இப்ப  எங்கட பாவம் எல்லாம் போய், கோடி புண்ணியமும் வந்திட்டுது.. அருமை என்ன.. எண்டு நக்கல் டிரோஷனிடம் இருந்து. சிரித்து கொண்டோம்.  
சாமி தரிசனம் காட்டுறன் எண்டு சில விதிகளையும் மீறி எங்கோ கூட்டிச்சென்றான்.  அங்க ஆயிரம் ஆயிரம் பேர் வரிசைகளில் நின்றார்கள். . பலரையும் இடித்து தள்ளி எங்களை அழைத்துச்சென்றான். யார் யாருக்கோ  காசை கையில் திணித்தான். வரிசையில் நின்றவர்கள் எங்களை வித்தியாசமாக பார்த்தார்கள். எனக்கு  சங்கடமாய் இருந்தது  , இப்படி எல்லாம் தரிசனம் பெறும் ஆர்வம் எனக்கில்லை, நான் ஒதுங்கி நின்று கொண்டேன் .  , தடியன் விடுவதாய் இல்லை   எங்களை இழுத்து போய் பலவந்தமாய் சாமியை  காட்டினான்.


இப்போது அவனுக்கு பெரிய சந்தோசம், எதோ பெரிதாய் சாதித்து விட்டோம் என்பதாக பேசிக்கொண்டான் , 
வழமையாக மூன்று நான்கு மணித்தியாலம் நிக்கவேண்டும் என்று சொன்னான். ஆனால் எனக்கு அப்போது  தான் எதோ பெரிய பாவம் சேர்த்ததான உணர்வு. கால் வலிக்க நிக்கும் அந்த மனிதர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்ற தான குற்ற உணர்ச்சி.  

வெளியில் வந்து நான்கு பேருக்கும் ஆயிரத்துஐநூறு கேட்ட அவனின் கணக்கை  பேரம் பேசி ஆயிரம் ரூபாவுக்கும் முடித்து கொண்டோம். . சந்தோசம் தானே சார்  , சந்தோசம் தானே சார் எண்டு மீண்டும் கேட்டு போனான் அந்த தடியன்.  இரண்டு மணித்தியாலம் எங்களோட மினக்கிட்டு அந்த காசு, ஒரு நாளைக்கு இரண்டாயிடம் என்றாலும் ... எதோ கணக்கு எல்லாம் பார்த்து அவன்ட வருட வருமானம் ஐந்து லட்சம் இந்திய ரூபாய்கள்.. எண்டு சொன்ன  டிரோஷன்.  அதுக்கு அவன்ட இன்வெஸ்ட்மென்ட் அந்த வாளி மட்டும் தான்.   இன்கம் டக்ஸ் கட்டுவான் போல.. நாங்க அங்க டிகிரி படித்து கஷ்டப்பட்டு உழைக்கிரத்துக்கு , இங்க வந்து ஒரு வாளி வாங்கினா நிறைய  உழைக்கலாம் போல .. இது டிரோஷனின் கடி.  


மீண்டும் எங்கள் வாகனம் நிறுத்தி இருந்த இடத்துக்கு போன பொது அவள்  நின்றிருந்தாள். நாங்கள் வரும் வரை காத்திருந்து இருக்கிறாள். எங்களை கண்டதும் முகத்தில் எதோ மலர்ச்சி.  சோகம் வழியும் அந்த கண்களில் எதோ ஒரு சந்தோசம். நாங்கள் உடுத்து கழித்த வேட்டிகளை கொடுத்த பொது அவள் காட்டிய ரியாக்சன் வார்த்தைகளை தாண்டியது. அந்தளவு சந்தோஷ உணர்வை அந்த பழைய வேட்டிகள் கொடுக்குதேன்றால், அவளின் வறுமை மட்டம் பற்றி நினைத்துப் பார்த்தேன்.    அனாலும் அந்த வேட்டிகளுக்கான அவளின்  அந்த மூன்று மணி நேர போராட்டம், அதற்கான DETERMINATION வாழ்க்கை தொடர்பான சில புரிதல்களை ஏற்படுத்தி இருந்தது. 

அந்த தடியன், அப்பாவியான அவளின் அந்த சோகமான முகம் இன்னும் கண்களுக்குள் நிக்கிறது .. வாளிகளுக்கும் வேட்டிகளுக்கும் பின்னால் இருக்கிற முரண்பாடான அவர்களின் நிஜ வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோசித்து கொண்டே மதுரை நோக்கி போகிறேன்...
தொடரும்...     

Share this:

Thuvaragan said...

தடியனுக்கு 1000 ரூபாய் கொடுத்தவர்கள், அந்த பெண்ணிற்கு கழித்த வேட்டியை தவிர என்ன கொடுத்தீர்கள்...? அறிய ஆவலாய் உள்ளேன்....:)

Unknown said...

டிரேசனை அவனுடய பார்வையில் இதை எழுதசொல்லுங்கள்

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes