BREAKING NEWS

Like Us

Tuesday, February 8, 2011

ஈரான் திரைப்பட விழாவும் இடையில் நின்ற படமும்


"Childrens of heaven", "The colour of paradise" என்ற மஜித் மஜிடியின் ஈரானிய திரைப்படங்களை பார்த்திருந்ததால் ஈரான் திரைப்படங்கள் மீது எப்போதுமே ஒரு காதல் இருந்ததுண்டு. மனித நேயத்தையும், மனித உறவுகளின் நெகிழ்ச்சியான கவித்துவ வாழ்வியலை கொண்டவை அவை.

ஈரான் படங்களின் கலரும், மனிதர்களும், சம்பவங்களும் மூடு பனி, வீடு, முள்ளும் மலரும் போன்ற எண்பதுகளின் பாலு மகேந்திரா, மகேந்திரன் படங்களை ஒத்திருக்கும். எதோ ஒரு அழகுணர்ச்சியும், சோகமும் ஒட்டிக்கொண்டு இருக்கும்





சில்ட்ரன் ஆஃப் ஹெவன் பார்த்து பல வருடங்கள் ஆனாலும் இன்னும் மனசில் நிக்கிறது. அண்மையில் கூட கலைஞர் தொலைக்காட்சியில் மீண்டும் கொஞ்சம் பார்த்ததாக நினைவு இருக்கிறது.


சிறுவன் தனது த‌ங்கையின் கிழிந்த ஷுக்களை தைத்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறான். வீடு செல்லும் வழியில் கடைக்கு செல்கிறான். உருளைக்கிழ‌ங்கு வா‌ங்கும்போது, கடையிலிருக்கும் உபயோகமில்லாத பிளாஸ்டிக் பைகளுக்கு அருகே ஷுவை வைக்கிறான். அந்த நேரம் கடைக்கு வரும் பழைய பொருட்களை எடுத்துச் செல்பவன் தவறுதலாக ஷுவையும் எடுத்துச் செல்கிறான்.


ஷு தொலைந்துபோன விவரத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என தங்கையிடம் கூறுகிறான். காரணம், அந்த குடும்பத்தின் வறுமை. காலனி தொலைந்ததை தந்தையிடம் மறைப்பதற்காக அவர்கள் சந்திக்கும் போராட்டமே அந்த படம் . குழந்தைகளின் உலகம் அழகானது, மனசில் பட்டத்தினை அப்படியே செய்கின்ற சந்தோசம், அந்த பருவத்துக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. குழந்தைகள் ஒரு விஷயத்தை எத்தனை நேர்மையாக அதே நேரம் தீவிரத்துடன் அணுகிறார்கள் என்பதை கலை அமைதி கெடாமல் சொல்கிறது ம‌ஜித் ம‌ஜிதின் இப்படம்.


திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் பதாகை பார்த்தேன், ஏழாம் திகதி முதல் ஐந்து திரைப்படங்கள் திரையிடுகிறார்கள்.. ஏதாவது ஒன்றாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்று பார்த்தது தான்.."Children of Eternity "

பாசக்கார அண்ணன், மனநிலை பாதிக்கப்பட்ட தம்பி, வயது போன தாய்.... அழகான காதல், வீட்டோடு இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட தம்பியின் காரணமாக தன் மகளை திருமணம் செய்து வைக்க மறுக்கும் அப்பா. பாசமுள்ள தம்பிக்காக காதலை மறந்துவிட முடியாமல் தவிக்கும் அவர்களின் போராட்டமே அழுத்தம் நிறைந்த இந்த படம்.

மகளை தருவதென்றால் தம்பியை மனநல காப்பகத்தில் சேர்க்குமாறு பணிக்கும் காதலியின் தந்தை, தடுமாறும் ஹீரோ, தவிக்கும் காதல். காப்பகத்தில் அவஸ்தைப்படும் தம்பியின் உணர்வுகள் . காதலை துறந்து தம்பியை மீண்டும் கூட்டிவர முடிவு எடுக்கும் ஹீரோ, அங்கிருந்து தப்பித்து தொலைந்து போகும் மனநினை பாதிக்கப்பட்ட தம்பி... என்று படம் பல திருப்பங்களுடன் தெஹெரன் வீதிகளில் பயணித்து முடிவை நெருங்கும் போது தடைப்படுகிறது படத்தின் டி.வி.டி . மிகுதி பத்தோ பதினைந்து நிமிட படத்தினை எவ்வளவோ முயன்றும் ஓட்டமுடியாமல் போனது இலங்கை திரைப்பட கூட்டுத்தபனத்தினருக்கு.



அத்தனை அழகிய படத்தின் முடிவு தெரியாமல் போகின்ற சோகம் வார்த்தைகளில் அடக்கமுடியாதது. படம் பார்த்து வெளியில் வந்த அனைவர் முகத்திலும் எதோ துக்கம் ஒட்டிக்கொண்டு இருந்தது. சிலர் வெளிக்காட்டி கொண்டனர்.

முடிவு தெரியாத பல சம்பவங்களின் தொடர்ச்சி தான் வாழ்க்கை, என்ற யதார்த்தை உணர்த்திசென்றது அந்த அழகான ஈரான் திரைப்படம்.


  

Share this:

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes