BREAKING NEWS

Like Us

Thursday, September 23, 2010

கூட்டத்தில் நான் தேடிய செவ்வந்திப்பூக்கள்....

பிறந்தது முதலே எம் வாழ்க்கை பல தெரிவுகளின் ஊடாக தான் பயணித்துக்கொண்டு இருக்கிறது. யதார்த்தமாக,  எம்  ரசனைக்கு  ஏற்ப தெரிவுகளை அமைத்துகொள்வதிலே நாம்  அதிகம் நேரம் செலவிடுகிறோம். நாம், எம் வாழ்க்கை என்பதே நாம் சார்ந்த தெரிவுகளின் பிரதி விம்பம்   தான்.  

ஆறாவது தடவையாக இருக்கும் என நினைக்கிறேன் , புத்தகத் திருவிழாவுக்கு இந்த முறை நான் செல்வது. வழமை போலேவே இருந்தது கூட்டம், இம்முறை அனைத்தையும் குறுகிய நிலப்பரப்புக்குள் அடக்கியது நிறையவே நெருக்கடியாக இருந்தது.

இருந்தும்  பூபாலசிங்கம் புத்தக சாலை, கிழக்கு பதிப்பகம் , சேமமடு புத்தக நிலையம், எக்ஸ்போ கிராபிக்ஸ் நிறுவனங்களில் தேவையானவற்றை வாங்கிகொண்டேன். நான் வழைமையாக வாங்கும் குமரன் பதிப்பகத்தை இம்முறை காணவில்லை. இம்முறை வியாபாரம் சிறப்பாக இருப்பதாக பலரும் சொன்னார்கள்.  

கடல் போன்ற புத்தகங்களிடையே  ஏன் ரசனைகுரியவற்றை தெரிவது என்பதே மிக கடினமான காரியம் தான். முதலில் போனது சேமமடு புத்தகசாலைக்கு , இந்தியாவில் இருந்து வந்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன், என்ரசனைக்குரிய தரமான தெரிவுகள் இருந்தன.  நான் நிறைய புத்தகங்களை எடுப்பதை பார்த்த ஒரு அக்கா, விலை இந்திய ரூபாவில் இருப்பதாக கூறிச்சென்றார். இது எங்களுக்கு தெரியாதாக்கும் என்று நினைத்துக்கொண்டேன்.

முதலில் எடுத்தது சோம வள்ளியப்பன் எழுதிய , "யார் நீ" என்ற , பல்வேறு பெர்சனலிட்டிகளை ஆராயும் ஒரு புத்தகம், உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் ஒன்பது பெர்சனலிட்டிகளுக்குள் அடக்கிவிடலாம் என்று தொடங்குகிறது அந்த புத்தகம்.

சோம வள்ளியப்பன் என்ற எழுத்தாளருடனான ஏன் அறிமுகம் அனந்த விகடனில் இருந்து ஆரம்பிக்கிறது என்று நினைக்கிறேன். பல வருடங்களுக்கு முன் பல தன்னம்பிக்கை தொடர்கள், பின்னர் நாணயம் விகடனில் பல பணம் பண்ணும் முறைகளை தந்தவர் என்றவாறாக நினைவு இருக்கிறது.

மீண்டும் பங்குச்சந்தை பற்றிய நுணுக்கங்களை சொல்லும் , அள்ள அள்ள பணம் என்று புத்தகம் , தொடராக வெளிவந்த ஐந்து புத்தகம்கள்  இருந்தன . தொடராக  வருபவற்றில் முதலாவது எப்போதும்  சிறந்ததாக இருக்கும் , வாங்கிகொண்டேன். 


கடந்த முறை "சுண்டி இழுக்கும் விளம்பர உலகம்" என்ற ஒரு புத்தகம் வாங்கினேன். மிகவும் பயனுள்ளதாக  இருந்தது. எனக்கு என்னவோ தமிழில் எம் பாடவிதானங்களை படிப்பது ஆழமாக விளங்க கூடியதாகவும் , ஆர்வமானதாகவும் இருக்கிறது. எனவே இம்முறையும் அப்படி ஒரு புத்தகம் ஏன் தொழிலுக்கு உதவலாம் என்கிற நினைப்பில்.

அடுத்து போனது கிழக்கு பதிப்பகத்துக்கு, ஏன் விருப்பத்துக்குரிய சுஜாதாவின் புத்தகங்களுக்கு யாருக்கு பதிப்புரிமை இருக்கிறது என்பது எனக்கு தெரியவில்லை. அனாலும், இங்கு அவரின் அனைத்து குறு நாவல்களும் விரும்பிய வகையில் புதுப்பதிப்பிடப்பட்டு இருந்தது கொஞ்சம் ஆச்சரியத்தை தந்தது. அவரின் எழுத்துகள் மலினப்படுத்தப்பட்டு போய்விட்டதோ என்று எண்ணிக்கொண்டேன்.  அவரின் எழுத்துக்கள் மீதான ஏன் விசுவாசத்துக்காகவே நைலான் கயிறு என்ற குறு நாவரை வாங்கி கொண்டேன். மருதன் என்ற ஒரு எழுத்தாளர் , முன்னரும் எதோ ஒரு வரலாறு சம்பந்தமான புத்தகம் வாசித்திருக்கிறேன்.  இம்முறை இரண்டாம் உலகப்போரின் முழுமையான கதையை சொல்லும் ஒரு புத்தகத்தை ஆர்வமூட்டியதால்  வாங்கினேன்.

அடுத்து சென்றது , எனக்கு நெருக்கமான பூபாலசிங்கத்துக்கு , அங்கும் அதிகப்படியான தெரிவுகள் ஆசையை ஊட்டின. கவிதை புத்தகங்கள் வாசித்து நிறையவே காலமாகிறது. செழியன் என்று ஒரு எழுத்தாளர் , ஒரு ஒளிப்பதிவாளரும் கூட. கல்லூரி படத்துக்கு ஒளிப்பதிவு செய்தவர். முன்னரும் உலக சினிமா தொடர்பான அவரின் ஒரு புத்தகம் வாசித்திருக்கிறேன் . காதல் கவிதைகள் உள்ள புத்தகம் "வந்த நாள் முதல்..."  கவிதைகள் மீதான ஏன் தாகத்துக்காக.

கடைசியாக , ஏன் விருப்பத்துக்குரிய எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் , வாழ்க்கை பற்றிய பல்வேறு புரிதல்களையும் அனுபவங்களையும் பேசுபவர். "துணை எழுத்து" என்ற புத்தகம் ஏற்கனவே விகடனில் அங்கும் இங்குமாக வாசித்திருக்கிறேன் . அவரின் வலி நிறைந்த எழுத்துகளின் முழுமையான சுகத்துக்காக வாங்கிகொண்டேன். 

கடைசியாக இரண்டு ஆங்கில புத்தகங்கள்  வாங்கிகொண்டு திரும்பினேன், ஒன்பது புத்தகங்களையும் எடுப்பதில் நான்கு மணித்தியாலங்கள் கடந்திருந்தது. ஆனாலும் வருடத்தில் ஒரு நாள் மட்டும் கிடைக்கும் ஆயிரம் ஆயிரம் புத்தகங்களை தொட்டுப்பார்க்கும் , நுகர்ந்து பார்க்கும் ஒரு சுகானுபவத்துக்காக அடுத்தவருடமும் காத்திருக்கிறேன், நான் தேடிய செவ்வந்திப்பூக்களுடன்.

Share this:

Subankan said...

அருமையான அனுபவப்பகிர்வு. என்னைப்பொறுத்தவரை இம்முறை ஏமாற்றமே. எதிர்பார்த்துப்போன தமிழ்ப் புத்தகங்கள் எங்கேயுமே கிடைக்கவில்லை :(

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes