BREAKING NEWS

Like Us

Tuesday, December 22, 2009

அளிமங்கட (The road to elephant pass)

முதன் முதலாக இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் இந்த படத்தின் போஸ்டரை பல மாதங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன்.  
அன்றிலிருந்து, அப்படி இந்த படத்தில் என்ன தான் இருக்கு? என்று பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் அதிகரித்திருந்தது. வழமை போலவே ஒரு பிரச்சார படமாகவும் , தமிழனை கேவலமாகவும் சித்தரித்து இருப்பார்கள் என்ற எண்ணமே படம் பார்க்கும் வரை இருந்தது.


நான் வேலை செய்யும் இடத்தில் பலரும் இந்த படத்தை சிலாகித்து பேசியதாலும் , சந்திரன் ரத்னம் என்ற பெயருடை ஒருவர் தயாரித்து இயக்கி  இருந்ததாலும் எப்படியும் பார்த்துவிட வேண்டும் எண்டு  முடிவெடுத்து  நண்பர்களிடம் கேட்கலாம் என்றால், சுதாவுக்கு சிங்கள படம் பார்க்கும் அளவுக்கு கிறுக்கு பிடித்து விட்டதோ என்று நினைப்பார்களோ என்று அஞ்சி , தன்னந்  தனியாகவே ரீகல் தியட்டருக்கு போனேன். உலக  சினிமாக்களை தேடும் நம்மில் பலருக்கும், மிக அண்மித்து , மிக தரமான சிங்கள சினிமாக்கள் இருந்தும், அதை பார்க்கும், ரசிக்கும் , பாராட்டும் மனப்பக்குவம் வரவில்லை என்பது  எமக்கிடையே நெகிழ்வுத்தன்மையின் ஆழத்தையே பிரதி பலிக்கிறது.

ரீகல் தியட்டர், பெரிய ஆச்சரியத்தை தந்தது, பழைய காலத்து மாட மாளிகை எப்படி இருக்குமோ அப்படி இருந்தது, எந்தவிதமான நவீன தொழில் நுட்பங்களுக்கும் அப்பாற்பட்டு  இருந்தது. கொழும்பில் தமிழ் படங்களுக்கு இருக்கும் வசூலில் கால் வாசியாவது இந்த திட்டர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே?


ஒரு இராணுவ வீரனுக்கும், ஒரு பெண் போராளிக்கும் இடையிலான அழகான காதல் மிக யதார்த்தமான இன ரீதியான அடையாளங்களுடன் சொல்லபட்டிருக்கிறது என்பதே படத்தின் ஒன் லைன்.  நிஹால் டி சில்வா என்ற எழுத்தாளரின் ஆங்கில நாவலை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கிறது படம்.

இரண்டாயிரத்து ஓராம் ஆண்டில் நடப்பதாக காட்டப்படும் கதையில், இராணுவத்திற்கான மிக முக்கியமான உளவு செய்தி ஒன்றை கொண்டு வரும் ஒரு பெண் போராளிக்கும் , அதை பெறுவதற்காக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளூடாக அவளோடு சேர்ந்து பயணித்து கொழும்பை வந்தடையும் இராணுவனுக்குமான அபாயம் நிறைந்த பயணமும் ,  அதில் நடக்கும் சம்பவங்களினூடாக நகர்கிறது கதை.

படத்தின் ஆதாரமே , குறித்த இருவருக்கும் இடையிலான வசனங்கள் தான். தமிழர் , சிங்களவர் என்ற எந்த தரப்பையும் குறைத்து பேசாமல் , இன முரண்பாடுகளில்  இருக்கின்ற யதார்த்தினை சுடுகின்ற வசனங்களால் புரிய வைக்க முயன்றமையே நான் இந்த படத்தை அதிகம் ரசிக்க காரணம். மொத்த சனத்தொகையில் எட்டு வீதமே இருக்கும் தமிழர்கள் எப்படி மூன்றில் ஒன்று நிலப்பரப்பை கேட்கலாம் என்பான் அவன்.. ஏமது பாரம்பரியமான நிலத்தில் , சுகந்திரமாக வாழ்வதற்கான உரிமைக்காகவே மட்டுமே போராடுகிறோம் என்பாள் அவள், இது போன்ற ஏராளமான கேள்விகளும் , மிக நேர்மையான நியாயப்படுத்தல்களும், தமிழர் பிரச்சனை, சரியான ஊடகத்தின் ஊடக , மிக பக்குவமாக புரியவைக்கப்பட முயர்ச்சிக்கப்பட்டு இருக்கிறது, அதில் குறித்தளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் , குறியீட்டு காட்சிகள், அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன, முக்கிய கதா பாத்திரங்கள் இருவரினதும் நடிப்பு அபாரம், அதிகம் நாடகத் தன்மை கொண்ட சிங்கள சினிமாவில் யதார்த்தம் காட்டி நிற்கின்றனர்.  யுத்தம் என்ற கோர முகம் குறைத்து , தமிழ் சிங்கள இனத்தவரான இருவருக்கு இடையில் காதல், அன்பு என்ற முகங்களை இந்த படம் காட்டி நிற்பது, அதிகம் வரவேற்க தக்க ஒன்று.

தமிழ் சிங்கள மக்களிடையே சரியான புரிதலை, நியாயமான தொடர்பாடல் மூலமே ஏற்படுத்த முடியும் , அந்த புரிதல், சகல அடித்தட்டு மக்களையும் சென்றடையுமாயின் , அடுத்த கட்ட போராட்ட வடிவம் என்றதற்கான தேடல் தேவையற்று போகலாம், அந்த பணி இது போன்ற சிறந்த ஊடகத்தின் ஊடாகவே இலகுவாக இருக்கும், மொத்தத்தில் பேதம் மறந்து பார்க்க வேண்டிய படம் அளிமங்கட

Share this:

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes