BREAKING NEWS

Like Us

Thursday, July 30, 2009

சில நேரங்களில் சில மனிதர்கள்

உலகில் கடினமான ஒன்று உண்டென்றால் அது மனிதர்களையும் அவர்கள்முகங்களையும் புரிந்து கொள்வது தான். நாம் கடந்து வரும் நட்புக்களிலும் உறவுகளிலும் எவ்வளவு போலித்தனம் ஒட்டியிருக்கிறது என்பது சில சமயங்களில் தெரியாமலே போய்விடுகிறது. எவ்வளவு போலியாகவும் , பகட்டாகவும் வாழ்கின்றோம் என்பதை பல சமயங்களில் எம் மனசாட்சி கூட ஏற்றுக்கொள்வதில்லை. திருத்தி கொள்ள அனுமதிப்பதும் இல்லை.

மனிதர்கள், பிறர் பற்றிய அறிதல்களிலும் , அவர்கள் தொடர்பான செய்திகளிலும் சம்பவங்களிலும் ஆர்வங்கொண்டு பின் அடிமையாகி பின்னர் அதுவே வாழ்கை என்றாகி விடுகிறது. அடுத்தவர் பற்றிய ஆய்வு இல்லாமல் மனிதனுக்கு வாழ்வு சுவாரசியம் இல்லாமல் போனதற்கு, எமது சமூக அடிப்படையில் தளர்வு உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதை தான் பாரதி
" தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பல வேடிக்கை மனிதரை"
என்றான்.

இந்த வேடிக்கை மனிதரை பற்றி அதிகம் அல்லட்டிக் கொள்ளாமல் , எமக்கு எமக்கு எது சரி என்று படுகிறதோ அதை தனித்தே செய்யவேண்டும், உலகம் ஆயிரம் சொல்லும், எனக்கான வழியில் நான் சரியாக சென்றுகொண்டிருந்தால் இந்த சில வேடிக்கை மனிதர்களால் என்ன செய்து விட முடியும்?

சில நேரங்களில் சில மனிதர்கள், கடந்த காலங்களில் என்னை அதிகம் கவர்ந்த தலைப்பு. இது எழுபதுகளில் ஜெயகாந்தன் எழுதிய அற்புதமான நாவல். சாகித்திய அகாடமி விருது கூட கிடைத்தது அவருக்கு . பின்னர் பீம்சிங் இயக்கத்தில் லக்ஷ்மி , ஸ்ரீ காந்த், நாகேஷ் நடிப்பில் திரைப்படமாக கூட வெளிவந்தது. அன்றைய எழுத்தாளர்கள் எப்படி நவீனத்துவமாக சிந்திக்கிறார்கள் என்பதற்கு திரைப்படமாக கூட வந்த நாவல் ஒரு நல்ல உதாரணம்.

இது போன்ற படங்களெல்லாம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடுவதை நான் பார்த்ததில்லை, பாவம் அவர்களுக்கு விஜய் , சிம்புகளோடு மாரடிக்க காலம் போதாதபோது தரமான தேடல்களுக்கு எங்கு நேரம்.

கங்கா(லக்ஷ்மி) என்ற பெண் பாத்திரத்தை மையமாக வைத்து நகருகிறது கதை, படத்தின் முதல் காட்சியில் கெடுக்கப்படுவதாக காட்டப்படும் ஒரு பெண்ணின் போராட்டங்களும் புரிதல்களுமே படத்தின் ஒன்லைன். ஆனாலும் பக்கம் பக்கமாக வீர வசனம் பேசாமல் , யாரையும் பழிவாங்காமல் கதை நகர்த்தப்பட்ட முறையே புதுமையிலும் புதுமை. மிக சொற்பமான மனிதர்களையும் அவர்களின் பாசாங்கான உறவுகளின் யதார்த்தத்தை காட்டி நிற்கிறது படம். எழுபதுகளில் வந்த படத்தில் dating, living together பற்றி வசனங்கள் இருப்பது எவ்வளவு புதுமை என்பதற்கு நல்ல சான்று. நான் இதெல்லாம் எதோ இருபத்தோராம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பு என்று இதுவரை நினைத்துக் கொண்டு இருந்தேன்.

பிரமிட் நிறுவன வெளியீடான இந்த படம், தரமான டி.வி.டி களாக கிடைக்கிறது. இங்கும் கூட வெள்ளவத்தை மோஹான்சில் கிடைக்கிறது. இப்படத்தை சிபாரிசு செய்து பார்க்க உதவிய நண்பர் ரிஷங்கனுக்கு நன்றிகள்.
Share this:

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes