BREAKING NEWS

Like Us

Saturday, June 25, 2011

நூற்றிஎண்பது ( சிர்த்தார்த் + இரண்டு)

சித்தார்த்த பார்த்து எத்தனை வருசமாச்சு, கடைசியா ஆயுத எழுத்துல பார்த்தது, ரெண்டே படம் தான் தமிழ்ல நடிச்சிருந்தாலும், இரண்டுமே மனசுல நிக்குது. ஜெனிலியாவுக்காக எகிறி குத்திச்சும்  , திரிசாவுக்காக நெஞ்சம் எல்லாம் காதல் சுமந்ததால.. அந்தகால ஜெமினி கணேஷன் மாதிரி ஒரு காதல் ஹீரோவா  ஒரு ரவுண்டு வருவார் எண்டு பார்த்தா,  காணாமலே போய்,  எட்டு வருஷம் கழிச்சு திரும்ப வந்திருக்கார்,  எண்டதால சும்மா ஒருக்கா போய் பார்த்த படம் தான் நூற்றிஎண்பது.


 
யாரோ சொன்னார்கள், இந்தியாவில் சினிமா பார்ப்பது சூப்பராய் இருக்குமென்று, சில மாதங்களுக்கு முன்னால் சென்னைக்கு சென்றபோது சததியமில் யுத்தம் செய் பார்த்தோம். அட்டகாசமாய் இருந்தது, மிக பிரமாண்டமாய்  இருந்தது சத்யம் திரையரங்கு. அப்போது காட்டினார்கள் சத்யம் படத்தயாரிப்பிலும் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்று. அவர்கள் எடுக்கும் படமும் பிரமாண்டமாய் இருக்கும் , பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.


கதை, மிகச் சாதரணமான ஒரு முக்கோண காதல் தான். அதை சிறப்பான படத்தொகுப்பு மூலமும், அழகான இரண்டு கதா நாயகிகள் மூலமும் தாங்கி பிடித்திருக்கிறார்கள்.


பழைய  கண்ணதாசன் பாடல் ஒன்றில் இப்படி ஒரு வரி வரும்..

"கண்கள் தீட்டும் காதல் என்பது, கண்ணில் நீரை வரவழைப்பது..  
பெண்கள் காட்டும் அன்பு என்பது, நம்மை பித்தனாக்கி அலைய வைப்பது."
அப்படி இரண்டு பெண்களின் அன்பில்  மாட்டிக்கொண்ட சிர்த்தார்தின் நிலை தான் இந்த படத்தின் ஒன்லைன்.

அழகாக வர்ணிககப்படும் கதாபாத்திரங்கள், அன்பான வெளிப்படுத்தல்கள்..போலித்தனம் இல்லாத சம்பவங்கள் ,  நீண்ட காலத்துக்கு பிறகு பார்த்தா சண்டையே இல்லாத  படம் என்பது போன்ற சில பல காரணங்கள்,  எனக்கு படம் பிடித்திருக்க போதுமானதாக இருந்தது..

ஆனால் எனக்கு முன் வரிசையில்  இருந்த ஒரு பெரிய செட் , அந்த படத்துக்கு போகலாம் என்று கூட்டி வந்த நண்பனை கேட்ட வார்த்தையால் திட்டிக்கொண்டு இருந்தார்கள். ஒரு வேளை அஜித் , விஜய் படம் பார்த்து பழகியவர்களோ என்று நினைத்துக்கொண்டேன்.

மனசில பட்டத்தை அழகுணர்ச்சியோடு செய்யும் ஹீரோ, போடோ கிராபர் ஆன ஒரு ஹீரோயின், அன்பை மட்டுமே காட்டும் இன்னொரு ஹீரோயின் என்று ரசிப்பதற்கு விடயங்கள் இருக்கிறது.
இந்த படத்தில் நான் ரசித்த இன்னொரு விஷயம், பின்னணி குரல்,  சில நடிகர்களின் குரலில் எதோ அழுத்தம் இருக்கும், சிர்தார்தின் குரலிலும் எதோ ஒரு attactive factor இருக்குது.  நித்யா மேனன் குறும்பாய் , அழகாய் இருக்கிறார். .. அவருக்கு பின்னணி குரல் கொடுத்ததும் , ஆயுத எழுத்தில் Isha deol  கு குரல் கொடுத்ததும் ஒருவராய் இருக்க வேண்டும்..அப்படி ஒரு அழகான பேச்சு. 


ப்ரியா ஆனந்த்.. நன்றாகவே நடிப்பு வருகிறது, நிறையவே "Glamour" ஆகவும் இருப்பதால் தமிழில் ஒரு ரவுண்டு வருவார் என்றே நினைக்கிறேன். . ஹீரோயின்கள் தொடர்பான என் எதிர்வு  கூறல்கள் பல நேரங்களில் சரியாகவே இருந்திருக்கிறது. 
மதராச பட்டணத்தில் நடித்த எமி ஜாக்சன் பொண்ணு, ஒரு ரவுண்டு வரும் எண்டு சொன்னேன், விண்ணை தாண்டி வருவையா ஹிந்தியில் திரிஷா நடித்த ரோலில்  அந்த பொண்ணு நடிப்பதாக கேள்வி.  (கிளிக் to Read )
பல விளம்பரங்களில் வரும் திவ்யா பரமேஷ்வர் என்ற பொண்ணு அழகா இருக்குதே எண்டு எண்ட ப்லொக்கில் புலம்பி இருந்தேன். அதை பார்த்து யாரோ பொன்னர் சங்கரில் ஹீரோயின் ஆக்கி இருந்தனர். .. (கிளிக் to Read )
அடுத்து படத்தில், இசையும் பாடல்கள் பற்றியும் குறிப்பிட்டு சொல்வதற்கு எதுவுமில்லை. பின்னணி இசை ஓரளவு ரசிக்கும் படியாக இருந்தது.  மற்றும் படத்தில் சித்தார்த்,   ப்ரியா ஆனந்த் அணியும் "costume"   அழகு. நிறையவே மினேக்கேட்டு Rich ஆக காட்டி இருந்தார்கள்.


மொத்தத்தில் தொய்வான கதை, தூக்கல் இல்லாத இசை என்று சில குறை பாடுகள் இருந்தாலும் ... பொழுது போக, சந்தோசமாய்  பார்க்க கூடிய படம் இந்த நூற்றிஎண்பது.   பிற சினிமா பதிவுகள்


Monday, June 6, 2011

மது சங்கரின் குறும்படமும் முத்தமிழ் விழாவும்

மிக நீண்ட காலத்து பின் ஒரு தரமான, அழுத்தமான பல்கலைக்கழக  விழா ஒன்று நடந்து முடிந்திருக்கிறது. கடந்த ஞாயிறு அன்று நடந்த விழாவின் முன் பகுதி சற்றே நேர்த்தியற்றதாக  இருந்தாலும்,  பின்னர் நடந்த நிகழ்ச்சிகள்  சிறப்பாக  இருந்தது. 
பல்கலைக்கழக விழாக்களும் " கோம்மேர்சியல்" நோக்கத்துடன் நடத்தப்பட வேண்டும் என்பதே என் கருத்து. அந்த வகையில் இந்த விழா அந்த நோக்கத்தை சற்றே எட்டியிருக்கிறது என்பது தொடர்பான மகிழ்ச்சி .     

இன்றைய தேதியில், ஒரு விழாவுக்கு வருகின்ற ரசிகனை, முழு நேரமும் நிகழ்ச்சிகளிநூடக திருப்பதிப்படுத்த வேண்டிய தேவை கட்டாயமானது. இல்லாவிட்டால் கடந்த சில கழக விழாக்களை போல தொடர்புடைய மாணவர்கள் தவிர எவரும் இது போன்ற  நிகழ்சிகளை பொறுமையுடன் பார்க்க வரமாட்டார்கள்.

கடந்த காலத்தில்,  இது போன்ற பல நிகழ்ச்சிகளுக்கு முன் நின்று உழைத்தவன் என்கிற அனுபவத்தில்,  இம் முறை நிகழ்விலும் சில விடயங்கள் தவிர்க்கப்பட்டிருக்கலாம், 
 1. சில பல சிற்றுரைகள் (சிறப்பு அதிதி, உப வேந்தர் போன்றவர்களின்)
 2. நிகழ்ச்சிகளுக்கிடையே நீண்ட இடைவெளிகள்  
 3. ரசிகர்களின் கவனத்தை சற்றும் ஈர்க்காத வாத்திய கருவி / வாய்ப்பாட்டு நிகழ்சிகள் ( அப்படி ஒரு நிகழ்ச்சி இம்முறை   நடை பெற்றது, அதை கொஞ்சம் "fution" போல் நடாத்தி இருந்தால் நன்றாக இருந்திருக்கம். 
 4. பார்க்க வந்த கூட்டத்துக்கான சிற்றுண்டி தேவையே இல்லாத ஒன்று/ வீண் செலவு
 5. புத்தக வெளியீடுகள் / பரிசளிப்பு விழாக்கள்/ கெளரவிப்புகள் (நிகழ்சிகளின் தொடக்கத்திலே வைத்து விடலாம்) 5 .30 தொடக்கம் 7 .30  வரையான பீக் ஹவரில் கூடவே கூடாது.
இம் முறை நிறைவை தந்த சில விடயங்கள்

 1. இளைய சமூகத்தை கவரக்கூடிய சிறப்பு விருந்தினர். ( பா. விஜய் காகத்தான் கூட்டம் கடைசி வரை இருந்தது, கவிதை மூலம் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டது மேலுமொரு போனஸ்.
 2. பொறுமையை சோதிக்கும் அனிமேசன்கள் இல்லாமை  ( வழமையாக UCSC  தான் இந்த கொடுமையை செய்யும் )
 3. நிகழ்வுகளை பெரிதாக காட்டிய LED  ஸ்க்ரீன் . பெரும்பாலனவர்கள் இதை தான் பார்த்தார்கள் .
 4. ஒரே வகையான நிகழ்ச்சிகளை தவிர்த்தமை ( வழமையாக எல்லோருமே நாடகம் தான் போடுவார்கள் )
 5. அதிகம் அறுக்காத நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் 
கவியரங்கம் அருமை, Chreshan நின் காதல் கவிதைகளை பிளாக்கில் வாசித்ததுண்டு, அப்படி ஒரு அழகுணர்ச்சி, வாசிக்கும் பொது எழுதவேண்டும் போல் இருக்கிறது எனக்கும்.  கவிதைகளிலான பதிவொன்று  எழுத நீண்ட நாளாய் ஆசை ஆனாலும் எதோ தடுமாற்றம். Chreshan நின் கவிதை  கேட்க இறுதிவரை காத்து இருந்தேன், ஆனால் Chreshan னுக்கு காதல் மறந்து  வீரம் வந்ததில் ஏமாற்றமே.  நடுவில் வந்த கிராமிய நடனம் அருமை , பாடல்களின் தெரிவும்  கோர்த்த விதமுமே அதன் success.

இனி விசயத்துக்கு வருவோம், நான் இந்த நிகழ்ச்சி பார்க்க வேண்டும் என்று நிறைய நாளாவே காத்திருந்தேன். காரணம் எங்கள் பாசத்துக்குரிய தம்பி, எழுச்சி நாயகன்,  இயக்குனர்  மது சங்கர் குறும்படம் எடுக்கிற செய்தி நிறைய நாட்களுக்கு முன்னதாகவே கசிந்திருந்தது.

மதுவிட்ட  ஒரு பெரிய கலை ஆர்வம் இருக்கு என்றது தெரியும், ஆனா Assistant Director எல்லாம் வச்சு  குறும்படம் எடுக்கிற அளவுக்கு பெரிய இயக்குனராக மது வருவான் எண்டு நான் எதிர் பார்க்கல.

மது சங்கர் கம்பஸ்  வந்த ஆரம்ப காலங்கள் இன்னும் நினைவில நிக்குது.  அந்த காலத்து மது தியாகராய பாகவதர் மாதிரி முடி வளர்த்திருந்தான்.  அந்த பாழாய் போன தலை முடியை ஆட்டி ஆட்டி மது டயலாக் பேசும் போது  பொம்புளை புள்ளைகள் எல்லாம் எழும்பி நிண்டு கை தட்டுங்கள் . 

ஒருவேளை தண்ட அழகில மயங்கித்தான் அவங்க  "cheer" பண்ணுறாங்கள் எண்டு தப்பா  நினைத்து,  மது சங்கர் இயக்குனர் ஆகாமல் ஹீரோ ஆகிடுவானோ எண்டு கூட நாங்க பயந்தம். ஆனா அவன் சரியான பாதையை தேர்ந்தெடுத்து இன்றைக்கு பெரிய இயக்குனாராகி இருப்பது எங்களுக்கு பெரிய சந்தோசம் , ஏன் எண்டால் நாங்க மது சங்கர் எல்லாம் ஒரே கூத்துப் பட்டறையில் வளர்ந்தவர்கள்.   


சில வருடங்களுக்கு முன்னர் எண்ட வீட்ட வந்த மது , " திரைக்கதை எழுதுவது எப்படி" என்ற சுஜாதாவின் புத்தகத்தை தூக்கி கொண்டு போய்ட்டான் . இன்னும் கொண்டு வந்து தரவில்லை என்பது உபரி தகவல்.  அவன்ட குறும்படத்தில் வைத்த "twist" களும் "symbols" களும் அந்த புத்தகத்தை அவன் பிரித்து மெய்ந்திருக்கிறான் என்பதற்கான சாட்சி.  இந்தளவு "refer" பண்ணி குறும்  படம்  எடுத்த  மது   கவுதம் மேனன் போல கொஞ்சம்  இமிட்டேட் பண்ணினது சங்கடமாய் இருந்தது. ஆனாலும் குறும் படங்களுக்கு " Voice Over" தவிர்க்க முடியாதது  நியாயமே.


எங்க டிரோஷன், தமிழ் ராஜன்  மாதிரி ஆக்களும் நடிக்கிறதில, ஓவர் Act பண்ணி படத்த கெடுத்துடுவான்களோ எண்டு நான் பயன்திருந்தனான் . டிரோஷன்  ஐம்பது ரூவாக்கு நடிக்க சொன்னா ஐயாயிரம் ரூபாவுக்கு நடிக்கிரவன். நல்ல  வேளை மேடை நாடகத்துக்கு மட்டும் தான் கொஞ்சம் ஓவர் அக்டிங் தேவை என்பதை புரிஞ்சு அளவா தரமா குடுத்திருந்தாங்க.

 ஹீரோவா ரொஷான  செலக்ட் பண்ணிய இடத்திலிருந்தே மதுட வெற்றி உறுதி செய்யப்படுகிறது. அங்க தான் இயக்குனரா உயர்ந்து நிக்கிறான் மது.  எனக்கு கம்பஸ்ல  ஏறக்குறைய எங்கட  ஆக்கள்   எல்லோரையும் தெரியும், ஆன இப்படி "close up" காட்சிகளுக்கு   பொருத்தமா charm ஆன  ஹீரோ quality யோட  ரொஷான தவிர  வேற யாரையும் யோசிக்க முடியல.  ஒரு வேளை "Jesh" பொருந்தலாம். நல்ல வேளை டிரோஷன ஹீரோவா போடததால LED Screen உடையாம தப்பிருச்சு.


அதிகம் ஆர்ப்பாட்டம் இல்லாத தரமான  நடிப்பு ரோஷனுடையது. அனாலும் குரலில் கொஞ்சம் தெளிவின்மை இருந்தது. பத்து நிமிடமே ஓடும் படத்தில் மற்றைய காதாபாத்திரங்கள் வந்து போகின்றவை தான். அனாலும் டிரோஷன் , தமிழ் ராஜன்,   கலை பிரியா , கலை வாணி ஆகியோருடைய நடிப்பு குறிப்பிடும் படியாக இருந்தது.   வயதான பாத்திரங்களில் "Make -Up" இல் கொஞ்சம் மினக்கிட்டு இருக்கலாம். அந்த விடயத்தில் எந்த கதாபாத்திரமும் கவனம் எடுத்ததாக தெரியவில்லை.

கேமரா அங்கிளில் பின்வரும் இடங்களில் கொஞ்சம் இடிக்கிறது, 
 1. ஹீரோ அறிமுகமாகும் இடம்.
 2. ஒரே அங்கிளில் இரண்டு நிமிடம் ஓடும் தண்ணி அடிக்கும் காட்சி
 3. twist வைத்த இடத்தில் ஓவராய் "zoom" ஆகும் கமெரா
 4. பக்கவாட்டில் காட்டும் நிறைய இடங்கள்  

அனுபவம் இன்மை தெரிகிறது. ஆனலும்  தனித்த முயற்சி எதிர் பார்த்ததை விட நன்றாக இருக்கிறது.  
டிரோஷனுக்கும், ஹீரோயினுக்கும் (?) இன்னும் கொஞ்சம் "close up" காட்சிகள் வைத்திருக்கலாம்.  தெரிந்தெடுத்த "location"    கள் குளுமையே.   


செல் போன் சிணுங்கல்களுடன் ஆரம்பிக்கும் பரபரப்பு. வெற்றுப் போத்தல் உருளுதல், ரோஜாப்பூவை "Zoom" செய்து தொடக்கி, கேமரா விரிகையில் நகரும்/தெளியும்   கதை முடிச்சு  , தேவையான இடங்களில் வரும் "Fade effect"   " repeated seens" தரமான படத்தொகுப்பினை காட்டி நிற்கிறது.  தனித்தே தெரிகிறது " எடிட்டிங் , டப்பிங் போன்றவற்றின் நேர்த்தி.


 மதுவின் அந்த கன்னி முயற்சியை நிறையவே  பாராட்ட வேண்டும் , படம் ஓடிக்கொண்டு இருக்கும் போது மது சங்கரை பார்த்தேன்.  பதட்டத்துடன் நின்று பாத்துக்கொண்டு நின்றான் . அதில் ஒரு ஏக்கம் தெரிந்தது ,  அரங்கு நிறைந்த மக்கள் இருந்து அவன் படத்தை பார்ப்பது   நிறைவை தந்திருக்கும் என்று நினைக்கிறேன்,

அண்மையில் நடந்த கலை விழா நினைவுக்கு வந்தது. 
மது சங்கர்   நாடகம் போட்டான்.  அவனது நாடகம் மேடை ஏறும் நேரம் தாமதமாகி கொண்டே வந்தது. குட்டி போட்ட பூனை அங்கும் இங்கும் ஓடிக்கொண்டு இருந்தான்.  அவன் கண்கள் கோவத்தில் சிவந்திருந்தது.  மது,  பரிசு பெறும் ஸ்கூல் பிள்ளைகளை பிடிச்சு வச்சிருக்கம், உன்ட நாடகத்தை   பார்க்க அவன்களாச்சு இருப்பாங்கள் மச்சான் எண்டு யாரோ அறுதல் சொன்னார்கள். அதையும் நகைச்சுவையாகவே  எடுத்துகொண்டான்.

அவனது நாடகம் மேடை ஏறியபோது எட்டு மணி தாண்டி இருந்தது, எண்ணி ஒரு நூறு பேரே ஹாலில் இருந்தனர்.  அண்டைக்கு வலிச்சிருக்கும்  அவனுக்கு, ஆனா  வலி தாங்கிற உள்ளத்தால தானே ஜெயிக்கவும் முடியும்.       


Saturday, May 14, 2011

தமிழர்களே ! தமிழர்களே! நீங்கள் ஏன் என்னை கடலில் தூக்கி போட்டீர்கள் ?

கருணாநிதி படு தோல்வி அடைந்துகொண்டிருக்கிற செய்தியை கேட்கின்ற  பொது என்றைக்கும் இல்லாத ஆனந்தம் அன்று, இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் அது போன்ற  போன்ற செய்தி ஆனந்தம் அளித்திருக்கும் என்றே  நம்புகிறேன். 

இரண்டு  வருடங்களுக்கு முதல் இருக்கும்,  இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்த நேரம், தமிழக எம்பீக்கள் எல்லாம் இராஜினாமா செய்வதாக அறிவித்தார் கருணாநிதி, பின்னர் அவரது அன்னை சோனியா கேட்டுக்கொண்டதற்கு இணங்க அந்த நாடகம் முடிவுக்கு வந்தது. பின்னர் ஒரு நாள், இலங்கையில் போர் நிறுத்தம் வேண்டி உண்ணாவிரதம் இருக்க அண்ணா சமாதிக்கு வந்தார் கருணாநிதி, பகல் வேளை வரை  காத்துப்பட இருந்து விட்டு சென்று விட்டார், பின்னர்  கலைஞர் தொலைக்காட்சி இப்படி அறிவித்தது, " கலைஞர் உண்ணாவிரதம், போர் நிறுத்தம் அறிவித்தது ராஜபக்சா  அரசு " 

வெறுப்பாக இருந்தது, கோபமாய் வந்தது. நான்கு லச்சம் மக்களின் அவலம் இது போன்ற பச்சோந்தி தமிழ் அரசியல் வாதிகளால் திசை திருப்ப படுகிறதே என்று, அந்த சம்பவங்களின் பின்னரே எம் மக்கள் மீதான ஒட்டு மொத்த பரிதாபமும் நடந்து முடிந்தது. 

முன்பெல்லாம், கருணாநிதி மீது நிறைய மதிப்பு இருந்தது, அவரின் உழைப்பும் தமிழ் ஆற்றலும் அபரிமிதமானது, அனால் அன்றிலிருந்து நான் அதிகம் வெறுக்கும் மனிதராக கருணாநிதியும் காங்கிரஸ் கட்சியும்  மாறியது.    அவரும் காங்கிரஸ் கட்சியும்    படு தோல்வியை சந்திக்க வேண்டும் என்பதே என் சமீப கால  விருப்பமாக இருந்தது. . அந்த விருப்பம் இந்த தேர்தல் மூலம் நிறைவேறி இருக்கிறது.
கருணாநிதியின் அரசியல் எதிர்காலம் இந்த தேர்தலுடன் ஏறக்குறைய முடிந்து விட்டது  என்பதில் ஐயமில்லை. உதய சூரியனும் அஸ்தமனமாகி விட்டது. 

இந்த தோல்விக்கு பிறகும் அவருக்கு நிறைய எதிர்பார்ப்புக்கள் இருக்குமாயின் ஜெயலலிதா குண்டுக்கட்டாய் தூக்கிவந்து சிறையில் வைப்பார் . அவரது குடும்பத்தில் பலருக்கும்  பலருக்கும் ஜெயலிதா பல இன்ப அதிர்ச்சிகள் கொடுப்பார். அவரின் பழிவாங்கும் உணர்ச்சி பற்றி புதிதாய் எதுவும் சொல்லவேண்டியது இல்லையே. அத வகையில் ஜெயலலிதா வந்தது மகிழ்ச்சியே.


என்ன திடீரென்று ஜெயலலிதா மீது பாசம் என்றெல்லாம் இல்லை, அவா வந்தும் எதுவும் செய்து விட போவது இல்லை, கருணாநிதியை விட மிக திட்டமிடலுடன் கூடிய சந்தர்ப்பவாத அரசியல்வாதி ஜெயலலிதா.

கருணாநிதி தோற்க வேண்டும் ,  அவர் தமிழ் சமூகத்தின் காவலராக இருந்து கொமேடியானாக மாறியதால் ஏற்பட்ட ஏமாற்றம் என்பன அடுத்த மாற்றீடான ஜெயலலிதா மீது நம்பிக்கை கொள்ள வைத்திருக்கிறது. காங்கிரசுக்கும் கருணாநிதிக்கும் தாங்களின் பாவம் இப்போதாவது புரிய வேண்டும்.


ஜெயலலிதா மீது பெரிதாக நல்ல அபிப்பிராயம் இல்லாவிட்டலும் , அவரின் உறுதியும் , போராடும் குணமும் மதிப்பினை உண்டு பண்ணுகிறது.  அதிகம் பிற்போக்கான தமிழகத்தில், ஒரு பெண்ணால் அத்தனை ஆண்களையும் காலில் விழ வைக்க முடியுதென்றால் , அவரின் ஆளுமையின் விஸ்வரூபம் பிரமிக்க வைக்கிறது.

அனாலும், மாநில அரசியலை தாண்டி சாதிக்க  கூடிய திறமை அவருக்கு இருக்கிறது. ஆனால் அதற்கு அவர் நிறையவே மேன்மைப்பட்ட அரசியல் வாதியாக மாற வேண்டியிருக்கிறது.
அவரின் காய் நகர்த்தல்கள் தேசிய ரேதியாக இருக்க வேண்டும் . காங்கிரஸ் என்கிற நூற்றி இருபது வருட கட்சி பலமானது. அதை வீழ்த்த இளைஞர்கள் இல்லாத இந்துத்துவ கட்சியான ப.ஜ.க வால் முடியாது. எனவே நீண்டகாலத்தில் காங்கிரசை வீழ்த்த ஒரு மூன்றாவது அணி அமைய வேண்டும்.

அப்படி ஒரு மூன்றாவது அணியை , இதர மாநில கட்சிகளை இணைத்து அகில இந்திய அளவில் பலம் வாய்ந்த கூட்டணியாக மாற்ற வேண்டும். சந்திர பாபு நாயுடு , ஜெகன் மோகன் ரெட்டி , நவீன் பட்நாயக், இடது சாரிகளின் பிரகாஷ் கராத், கமுநிஸ்ட் கட்சிகள் அதையும் விட விருப்பம் இல்லாமல் காங்கிரசுடன் ஒட்டிக்கொண்டு இருக்கும் , மம்தா, சிரஞ்சீவி , போன்றவர்களையும் இணைத்துக்கொண்டால்  ஊழல் நிறைந்த காங்கிரசும் ஒரு நாள் மண் கவ்வும். அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டால்   , பிரதமராகும் வாய்ப்பு கூட இருக்கிறது ஜெயலலிதாவுக்கு.

சரி,  எது எப்படி இருந்தாலும், கருணாநிதி தோற்றுவிட்டார், கடாபி இன்றோ நாளையோ , பாகிஸ்தான் நொந்து நூலாகி தன் இறையாண்மையையும் தொலைத்து விட்டு நிற்கிறது, ஜப்பானில் அணுக்கசிவு, சுனாமி, இங்கோ போர் குற்ற  அறிக்கை, சிறையில் களி தின்னும் யாரோ தளபதி என்று பல சம்பந்தம் இல்லாத நிகழ்வுகளில் கோவை எதையோ காட்டி நிற்கிறது, இதைதான்  கேயர்ஸ் தியரி என்று சொல்வார்களோ.  

Friday, April 15, 2011

ஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 3

நீண்ட காலமாகவே எழுதவில்லை,  அண்மையில் எழுதிய பதிவுகள்  எல்லாம் மொக்கையாக இருப்பதாகவே உள்ளுணர்வு சொல்லுகிறது. . நண்பர்களிடமும் கேட்டுப்பார்த்தேன், எதுவும்  சொல்லவில்லை , பேஸ் புக்கிலும் ஒன்றிரண்டு பேரே லைக் பண்ணி இருந்தனர்.
அனால் தனது முயற்சியில் சற்றும்  மனம் தளராத விக்கிரமாதித்தன் , பழைய பதிவுகளின் ரிதத்துக்கு வரும் என்ற நம்பிக்கையுடன் இந்திய பயணம் தொடர்பான மூன்றாவது மொக்கை பதிவை ஆரம்பிக்கின்றான்.

தேனியில்இருந்து திருச்சிக்கான நெடுஞ்சாலை அழகானது, தமிழ்நாட்டின் பசுமையான பக்கம் இந்தப்பக்கங்களில் தான் பார்க்க முடிகிறது. இரு மருங்கிலும் வயல்களும் தோட்டங்களும் , அழகாய் இருந்தது. வாகனத்தை நிறுத்தி வயல்களில்களும் தோட்டங்களிலும் புகுந்து கொண்டோம். மாலையில் உச்சிப்பிள்ளையார் , இந்தியாவின் மிகப்பெரிய யவுளியகம் சராதாஸ், மங்கள் அண்ட் மங்கள் என்று திருச்சி வீதிகளில் சுற்றியலைந்து விட்டு அடுத்த நாள் காலை ஸ்ரீ ரங்கம் கிளம்பினோம்.

திருச்சியில் அழகு கர்நாடகத்தின் கைகளில் உள்ளது. காவிரியில் தண்ணீர்  வேண்டும் பல காலங்களுக்கு முன்னால் ஆர்பாட்டம் செய்தவர்கள் , நதி நீர் இணைப்பு பற்றி பேசியவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை, தனக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய தண்ணீரை போராடி பெறமுடியாத தலைவர்களை   எல்லாம் நாம் உலக தமிழினத் தலைவர்கள் என்று போற்றிக்கொண்டு இருப்பதாலே நம் இனம் வீழ்ந்து கொண்டு இருக்கிறது. .

இந்திய சரித்திர ரீதியாக பார்த்தால்.. ராஜ ராஜன் காலத்துக்கு பின்னால் தமிழினம் பெரும்பாலும் அடிமைப்பட்டு தான் இருந்திருக்கிறது. வந்து போனவன் எல்லாம் தமிழனை அடிமைப்படுத்தி வைத்ததாக தான் பார்க்கமுடிகிறது. மொகலாய மன்னர்களும்  ஐரோப்பியரும் தான் கடந்த ஆயிரம் ஆண்டு கால தமிழரின் அடிமை சரித்திரம் எழுதி  இருக்கிறார்கள் ,  எனவே இன்றைய தமிழக அரசியல் வாதிகளின் குணவியல்பு குறு நில மன்னர்கள் போல் பொருள் செர்ப்பாளர்கலாகவும் , விலை போகும் ரசாக்களாகவும், எட்டப்பர்களாகவும் இருப்பதில் ஆச்சரியம் ஒன்று மில்லை.  சரித்திரமும் அதை தான் சொல்கிறது..

காலையில் ஸ்ரீரங்கம் போனோம்,  ஸ்ரீரங்கம் எதோ அதிகம் பரீச்சியமான சொல், நான் அதிகம் வாசித்த சுஜாதா , வாலி போன்றோரில் எழுத்துக்கள் பெரும்பாலும் ஸ்ரீரங்கத்து வீதிகளிநூடகவே  பயணித்து இருக்கிறது.மிக பிரமாண்டமான ரங்கநாதர் கோயிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று போட்டிருக்கிறார்கள்.ஆனாலும்  ராஜ குமாரிகளின் சோழ வெட்கமும் , சேர நளினமும் , பாண்டிய பாந்தமும் பரவிய மண்ணில் , ஒரு முஸ்லிம் தேவதையின் பாதம் பெருமாளை தரிசித்ததாக சரித்திரம் கூறுகிறது.

அலாவுதீன் கில் என்னும் அரசனின் கையில் இந்தியாவின் முக்கிய பகுதிகள் வீழ்ந்து இருந்தன, அந்த அலாவுதீன் கில்லின் யுத்த தளபதி முகமது அலி. தென்னிந்தியா பிரதேசங்களின் காவல் கட்டமைப்புக்காக திருச்சிராப்பள்ளியில் முகாமிட்டிருந்த அவனின் மகள் தான் மூன் சென்.

இந்த மூன் சென் பெருமாள் மீது காதல் கொண்டதாகவும், இந்து மதத்தின் மேல் நேசம் கொண்டதாகவும்.. ஸ்ரீ ரங்கம் கோவிலுக்கு அடிக்கடி வந்தாதாகவும் ஆரம்பிக்கும் அந்த கதை, பெருமாளை சிலையை பிரிந்து  சென்ற சோகத்தில் அவள் இறந்ததாகவும்.. அவளின் நினைவாக ராமானுஜர் துலுக்க நாச்சியார் கோவில் என்று ஒன்றை கட்டி மக்களை வழிபட செய்ததாகவும்  கூறுகிறது.

ஆக துலுக்க நாச்சியார் என்ற முஸ்லிம் பெண்ணுக்கு கோவில் ஸ்ரீரங்கம் பிரகாரத்திலேயே இருக்க இந்துக்களுக்கு மட்டுமே தரிசனைக்கு  அனுமதிக்கிறது நவீன இந்தியா.


தசாவதாரம் படத்தில் பார்த்தது போன்ற சிலை மூலஸ்தானத்தில் இருக்கிறது. அதை பார்ப்பதற்கு பல்வேறு விலைகளில் டிக்கெட் தருகிறார்கள். இப்போதெல்லாம் நான் economics சில் "price discrimination" என்ற concept இனை விளங்கப்படுத்துவதுக்கு ஸ்ரீரங்கத்து பெருமாளையே உதாரணம் எடுப்பதுண்டு . ஒரே  product பட் டிபிபிறேன்ட் prices.

கோவில் இருந்து வெளியில் வந்த போது தான் , அந்தச் சிறுமியை சந்தித்தேன், இந்த மொக்கை தொடரின் நாயகி , நான் தலைப்பில் போட்ட தேவதை எல்லாமே அவள் தான். ஒரு ஏழு அல்லது  எட்டு வயதிருக்கும் , எதோ ஒரு துரு துரு என்ற  குறும்பான அழகு, அழகான கண்கள் , கொஞ்சம் நிறம் மங்கிய பட்டுப் பாவாடை சட்டை ஒன்றை அணிந்திருந்தாள்.

எதிர்பார்க்காத நேரத்தில், அண்ணா.. ண்ணா காசு குடுண்ணா, பசிக்குதுண்ணா என்று கொஞ்சும் குரலில் கையை பிடித்துக்கொண்ட அவளுடனே என் அடுத்த பத்து நிமிடத்து உரையாடல்கள். 

நான்: யாரு உன்னைய இப்படி கேட்டக சொன்னங்க ?
சிறுமி : தெரியாதுண்ணா
நான் : அப்பா என்ன செய்யுறாரு ?
சிறுமி : பொம்மை விக்கிறாரு
நான் : எங்க ?
சிறுமி : திருச்சி டவுண்ணுல அண்ணா 
நான் : அப்பாவுக்கு தெரியுமா நீங்க  இப்படி காசு வாங்கிறது ?
சிறுமி : ....... (மௌனம்)
நான் : அம்மா ?
சிறுமி : கூலி வேலை செய்யுதுண்ணா
நான் :  வீட்ட்ல தம்பி தங்கச்சி இருக்க ?
சிறுமி : இரண்டு தம்பி பாப்பா அண்ணா...அண்ணா.. ண்ணா காசு குடுண்ணா, பசிக்குதுண்ணா..

முதலில் பத்து ரூபாய் கொடுத்தேன், சிரித்தாள்.. அப்படி ஒரு சந்தோசம், அழகாய் இருந்தாள். 

சிறுமி :THANKS  அண்ணா...அப்படியே வெட்கப்பட்டுக்கொண்டே.
நான் தொடர்ந்தேன் : படிக்கிறியா ?
சிறுமி : : ....... (மௌனம்)
நான் : இஸ்கூல் போறனியா ( ஒரு வேளை என் தமிழ் விளங்கவில்லையோ என்ற நினைப்பில் ?
சிறுமி : முன்ன போனன் அண்ணா
நான் : ஏன் நிறுத்தினாங்க ? (மொக்கை QUESTION தான் ஆனாலும் நான் கெட்டன்)
சிறுமி : தெரியாதுண்ணா... நிறைய கேள்விகள் கேட்டதற்காக என்னிடம் உரிமை எடுத்துக்கொண்ட அவள் அண்ணா.. ண்ணா ஜுஸ் வாங்கித்தாண்ணா என்று கெஞ்சும் குரலில்.. 


சரி எண்டு கோவில் வீதியில் இருந்த கடைக்கு கூட்டிச்சென்றேன். அங்கு கடைக்காரர் கடையை திறந்து விட்டு எங்கோ போய்விட்டார். . அடுத்த கடைக்கு போகலாம் என்று கூப்பிட்டேன் .. வரமாட்டேன் என்றாள்...யாரோ அறிவுறுத்தி இருக்கிறார்கள் கோவில் எல்லையை தாண்டி போகவேண்டாம் என்று ..  இவள் இரப்பதற்கு தயார்படுத்தப்பட்டவள் எண்டு புரிந்தது.

ஆனாலும் பாவமாய் இருந்தது, ஜுஸ் வாங்கி கொடுக்க முடியவில்லை எண்டு. ஐம்பது ரூபா கொடுத்து இந்த கடையில இருக்கிற எல்லா டைப் ஜுஸ்சும் வாங்கி குடி என்ன , யார்ட்டையும் கொடுக்காத என்று சொன்னன். மீண்டும் THANKS  அண்ணா...உணர்ச்சிவசப்பட்டு சொன்னாள். பக்குவப்பட்ட முறையில் எட்டு வயது குழந்தையால்  நன்றி உணர்ச்சியை காட்ட முடியும் எண்டு எனக்கு அன்று தான் தெரியும்.  
அதிக நேரம் பேசிக்கொண்டு இருக்க பயமாகவும் இருந்தது .. சிலர் பார்த்துக்கொண்டும் போயினர். ஒரு வேளை ஆண்டவனுடைய (நான் கடவுள்) அக்களாய் இருக்குமோ எண்டு பயமாய் இருந்தது  .. :-)

இன்றும் கண்களுக்குள் நிக்கிறாள் அந்த அழகு தேவதை, அவள் நாளை ஒரு படித்தவளாக இருக்கலாம் , ஒரு MODEL ஆக  இருக்கலாம், sports woman ஆக இருக்கலாம்.. அனால் இன்று பிச்சை தான் எடுத்துக்கொண்டு இருக்கிறாள் . டிரோஷன் சொன்னான் ஒரு வேளை அந்தப்பிள்ளை கலைஞருக்கு கடிதம் எழுதவில்லையோ ? 
   
ஒரு பக்கம் திருபப்தியாய் இருந்தது, ஒரு குட்டிச் சிறுமியின் குட்டி அசையான தான் ஆசைப்பட்ட ஜுஸ் வாங்கி குடிக்க நான் உதவியிருக்கேன் எண்டு.. அனாலும் விடை    தெரியாத கவலைகள், தென்கிழக்குச் சீமையில செங்காத்து பூமியில வாழுற  அந்த ஏழபட்ட  சிறுமியின் எதிர்காலம் எப்படி இருக்குமென்று ?


தொடரும்.....

ஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 1
   

Wednesday, April 6, 2011

ஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 2

மதுரை நோக்கி போகிறேன்... தொடரும்...என்று முடித்திருந்தேன் கடந்த பதிவை, ராமேஸ்வரத்தில் இருந்து ஒரு மூன்று மணி நேரத்தில் மதுரை வருகிறது, டிரைவர் பெரியசாமி இளையராஜா பாடல்களை ஓடவிட்டது இரண்டாயிரம் கிலோமீட்டர் நீளமான எமது தமிழ் நாட்டு பயணம் இளையராஜாவின்  காதல், சோக  பாடல்களுடனேயே கடந்துபோனது ஒரு சுகனுபவம் . ( டிரைவர் பெரியசாமி பற்றியும் அந்த பாடல்களுக்கு பின்னால் இருக்கிற அவனின் காதல் கதை பற்றியும்  அடுத்த அடுத்த  பதிவுகளில் பார்ப்போம்.)மதுரை எதோ பிடித்திருந்தது, அழகு என்று இல்லாவிட்டாலும், பரபரப்பான நகரம், சுறுசுறுப்பாக இயங்கிகொண்டு இருந்தது.  தமிழகத்தின் கலாச்சார நகரம், தூங்கா நகரம் எண்டு சொன்னார்கள் , இரவு பதினோரு மணி அளவில் வீதிக்கு வந்து பார்த்தேன் , உண்மை தான். இந்தியாவில் படம் பார்ப்பது நல்ல ஒரு அனுபவம் , அது பார்த்தால் தான் புரியும் , சூப்பராய் இருக்கும் என்று யாரோ சொல்லி இருந்தார்கள் , மதுரையில் தூங்கா நகரம் பார்க்க வேண்டும் என்று நானும் டிரோஷனும் பிளான் போட்டோம் , ஆனால் முடியாமல் போய்விட்டது. பின் சத்தியமில் "யுத்தம் செய்" பார்த்த கதை பெரிய சாமியின் கதையோடு அடுத்த எபிசோட்டில் வருகிறது.  

மீனாட்சி அம்மன் கோவில் போனோம் , கலை மற்றும் சிற்ப வேலைப்பாட்டில் உயர்ந்து நிற்கிறது கோயில். அம்மனை தரிசிக்க வரிசையில் நின்ற பொது , ஒரு வயசான பெரியவரிடம் பேச்சு கொடுத்தேன். . மதுரை பக்கம் ஊராம் , விவசாயம் பார்ப்பவராம்.. நான் சிலோனில் இருந்து வந்திருப்பதாக அவர் கேட்டு நான் சொன்னேன், பஸ்லையா வந்தீக எண்டு கேட்டார்,

முன்னதாக பாம்பன் பாலத்தில், அன்னாசி விற்பவனை பேட்டி கண்டோம், அவன் படித்திருக்க வாய்ப்பில்லை, ஆனாலும் அவன் மண்டபம் அகதிகள் பிரச்சனை , இலங்கை இராணுவம் மீனவர்களை தாக்குவதன் பின்னணி என்பதெல்லாம் பற்றி NDTV  பர்கா தத்தை விட அதிகமான தகவல்களை வழங்கினான். எனவே அறிவு என்பது கற்பதில் இல்லை தேடலில் தான் இருக்கிறது. 

மதுரையில் இருந்து அருகில் தான் இருக்கிறது, திருப்பெரும் குன்றம், அழகு முருகன் காட்சி கொடுத்த ஆறு படை  வீடுகளில் ஒன்று. அங்கு பார்த்த ஒரு நபர் நினைவுகளில் நிற்கிறார். நவக்கிரகங்களுக்கு அருகாமையில் கதிரை போட்டு அமர்ந்திருக்கிறார். ஒவ்வொரு நிமிடத்திலும் இரண்டு தடவைகள் "  நவக்கிரகங்களுக்கு நெய்  விளக்கு  எரியுங்க சார்" என்று  சொல்லிக்கொண்டே  இருந்தார். கொஞ்சம் மனப்பிறழ்வு அடைந்திருக்க வேண்டும், அவரின் முகத்தில் எந்த உணர்ச்சியும் இல்லை. அனால் குரல் மட்டும் ஒலித்துக்கொண்டே இருந்தது. நாள் முழுவதும் அப்படியே சொல்லிக்கொண்டு இருப்பார் போலும்,

அவரை இங்கே குறிப்பிடுவதற்கு காரணம் இருக்கிறது, தமிழ் நாட்டில் , என் இங்கும் கூட கோயில், கோயில் சார்ந்ததாக விரயமாகும் உழைப்பு , நேரம் அளவில் இல்லாதது. தேசிய கணிப்பீட்டில் வராமலே எத்தனை  ஆயிரம் பேரின் உழைப்பு வீணாவதாலே,  இந்தியாவின் இலக்கு இரண்டாயிரத்து இருபது வரை நீளமாக இருக்கிறது. 

நாங்கள் அடுத்து போவது கொடைக்கானலுக்கு, எங்க டிரைவர் பெரியசாமிக்கு மதுரையே நாங்க காட்டி தான் தெரியும். இருபது வயதே ஆன அனுபவமில்லாத அவனோட மலை வழிப்பயணம் பயமாய் தான் இருந்தது. இந்தியா போகும் யாரும் முதலில் ஒரு map வாங்கினால், சரியாக திட்டமிடலாம், மதுரையில் இருந்து குறுக்கு பாதையில் வத்தலகுண்டு போனோம், டிரோஷனுக்கும் map அத்துபடியாகி போனது, இது தான் நாங்கள் கடக்கும் பாலம், இரயில் கடவை என்று மப்பில் காட்டினான்.

கொடைக்கானல் மலைகளின் இராணி , அங்கு இருக்கிற எல்லா tourist spot  களும்  பார்த்தோம். . பல படங்களில் பார்த்த காட்சிகள் நினைவுக்கு வந்தது. குணா பாறை கமல்ஹசனால் tourist spot ஆக மாறி இருந்தது. 

அங்கு ஒரு மலை உச்சியில்  ஐநூறு வருடங்கள் பழமையான பிரெஞ்சு தேவாலயம் , அழகாய் இருந்தது, அதற்கு கீழே ஒரு வயோதிபர் தேநீர் வித்துக்கொண்டு  இருந்தார். 
அப்படி ஒரு தேநீர் குடிக்கவே இன்னொரு முறை இந்தியா போகவேண்டும்..

♫♪♫ வாழ்வான  வாழ்வெனக்கு வந்ததென  நானிருந்தேன்  .. .♫♪♫...... ஓடிக்கொண்டு இருக்கிறது இளையராஜா பாடல்,  கேட்டுக்கொண்டே  வானுயர்ந்த சோலை வழி இறங்கி திருச்சி போகிறேன் . 

தொடரும்.... 

Monday, March 28, 2011

ஸ்ரீரங்கத்து தேவதையும்........மாற்றம் தந்த இந்திய பயணமும் - 1

ஏராளமான சம்பவங்களையும் , அனுபவங்களையும் தந்திருந்தது சென்ற மாதம் போன இந்திய பயணம். பயணக் கட்டுரை ஒன்றாக எழுதவேண்டும் என்று பல விடயங்களை நினைத்து வைத்திருந்தேன்.  பிஸியான எக்ஸாம் மாதம் இது , வேறு வேலைகளும் வந்து சூழ்ந்து கொண்டதால் அதை நடைமுறைப்படுத்த முடியவில்லை. சம்பவங்களை நினைத்து பார்க்கின்ற பொது பல விடையங்களும் நினைவில் இல்லை .  ஆனால் சில மனிதர்களும் அவர்களின் முகங்களும் அப்படியே நினைவில் ஒட்டிக்கொண்டு இருக்கிறது , நாட்கள் பல கடந்தும் கூட.   

அப்படி இன்றும் நினைவில் நிற்கும் சில மனிதர்களை பதிகிறது இந்தப்ப் பதிவு. எமது  இரண்டாம்  நாள் பயணம், ஒரு மாலையில்  தஞ்சாவூரிலிருந்து ஆரம்பித்து ராமநாத புரத்தில் தங்குவதொடு முடிவடைகிறது, அடுத்த நாள் ராமேஸ்வரம் பார்ப்பதாக ஏற்பாடு.  காலையிலேயே பாம்பன் பாலத்தையும் தாண்டி ராமேஸ்வரம் சென்றோம்.. 

எனக்கும் டிரோஷனுக்கும் எம் மதம் சார்ந்த நம்பிக்கைகளிலும் சம்பிரதாயங்களிலும் அவ்வளவு உடன்பாடு இல்லை .  ஆனாலும் ராமேஷ்வரம் வரை போய் தீர்த்தம் ஆடாமல் வந்தனியோ எண்டு அம்மா பேசுவா, அதை விட நாம் செய்த பாவம் எல்லாம் தீரும் எண்டு யாரோ  ஒலிபெருக்கியில் கூவிக்கொண்டு இருந்தார்கள் . 

சரி ஆடிப்பார்த்திடுவோம், தீர்த்தத்தை எண்டு நினைக்கு போதே  பல மனிதர்கள் வாளிகளுடன் எங்கள் வாகனத்தை சூழ்ந்து கொண்டார்கள். 
ஒரு தடியன் எல்லோரையும் மீறி எங்களை ஆக்கிரமித்து கொண்டான். . அவன்தான் எங்கள் பாவங்களை போக்க  வாளியோடு வந்த GUIDE . GUIDE இல்லாமலும் பாவங்களை போக்க முடியாது எண்டு பிறகு தான் விளங்கியது.


நாங்கள் காவி வேட்டி வாங்கி கொண்டோம்.. அங்குதான் அறிமுகமாகிறாள் அவள். வேட்டிக்கு காசு கொடுத்த போதே.. எனக்கு தந்திட்டு போங்க என்று மெல்லிய குரலில் இரந்து கொண்ட அவளுக்கு  இருபது  இருபத்திரண்டு வயதிருக்கலாம்,  வறுமையில் வாடிய அவளின் ஒட்டிய  முகம் ,நிறையவே சோகத்தை சுமந்திருந்தது. கண்கள் கண்ணீருக்கு பழக்கப்பட்டிருந்தது. தயங்கி தயங்கி   இரந்த அவள் தொழிலுக்கு புதிது என்பது தெளிவாகவே விளங்கியது. பேச்சால் ஆக்கிரமித்து கொள்ளும் இந்திய மனிதர்களின்  பண்பு அவளிடம் இல்லை. தயக்கம்  தெரிந்தது.சரி உனக்கு தான் தருவம் எண்டு சேர் வாக்கு கொடுத்தார்.

பின்னர் கடலுக்கு போனோம் நீராடினோம். கோவிலுக்கு திரும்பும் வழியில் அவள்  நின்றாள், எங்கள் வேட்டியையும் எங்களையும் பார்த்துக் கொண்டாள். அந்த பார்வை இன்னும் கண்களுக்குள் நிற்கிறது. எதோ ஒரு  வலி,  ஏக்கம், ஏமாற்றம் கலந்த அப்பாவியான அந்த பார்வை ஆயிரம் எண்ணங்களை காட்டி நின்றது. " நில்லு என்ன,  கோயிலுக்க போட்டு வாறம்" என மீண்டும் ஒரு தடவை நம்பிக்கை கொடுத்தார் சேர்.

வாளியோடு வந்த தடியன், கோயிலுக்குள் ஒவ்வொரு தீர்த்தமாய் கூட்டிச்சென்றான்..ஒவ்வொரு தீர்த்தத்தின் அருமை பெருமைகளை கூறி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வாளி தண்ணீர் கிணத்தில் இருந்து அள்ளி ஊத்தினான். இருபத்திஒரு தீர்த்தம் இருப்பதாக  சொன்னான். ஒவ்வொன்றுக்கும் வித்தியாசமான சுவை , உஷ்ணம் இருப்பதாக கூறினான். நான் குடித்து பார்த்து உறுதிப்படுத்திக்கொண்டேன்.    அவனோடு விறு விறு என்று நடந்து  இருபத்தி ஒரு கிணறுகளில் தீர்த்தமாடியது  புதுமையாய்  இருந்தது.

கடைசியாய் கோடி தீர்த்தம் என்று ஒண்டு. " கோடி தீர்த்தம் கோடி புண்ணியம்" என்று எழுதி ஒட்டியிருந்தார்கள்.  கோடி தீர்த்தம் குறைவாக தான் கிடைக்கிறது ஒரு கிண்ணத்தில் பிடித்து முகத்தில் வீசி அடித்தான் ஒருவன்.  நகருங்க சார் நகருங்க என்று விரட்டி அடித்தான் இன்னொருவன். 

இப்ப  எங்கட பாவம் எல்லாம் போய், கோடி புண்ணியமும் வந்திட்டுது.. அருமை என்ன.. எண்டு நக்கல் டிரோஷனிடம் இருந்து. சிரித்து கொண்டோம்.  
சாமி தரிசனம் காட்டுறன் எண்டு சில விதிகளையும் மீறி எங்கோ கூட்டிச்சென்றான்.  அங்க ஆயிரம் ஆயிரம் பேர் வரிசைகளில் நின்றார்கள். . பலரையும் இடித்து தள்ளி எங்களை அழைத்துச்சென்றான். யார் யாருக்கோ  காசை கையில் திணித்தான். வரிசையில் நின்றவர்கள் எங்களை வித்தியாசமாக பார்த்தார்கள். எனக்கு  சங்கடமாய் இருந்தது  , இப்படி எல்லாம் தரிசனம் பெறும் ஆர்வம் எனக்கில்லை, நான் ஒதுங்கி நின்று கொண்டேன் .  , தடியன் விடுவதாய் இல்லை   எங்களை இழுத்து போய் பலவந்தமாய் சாமியை  காட்டினான்.


இப்போது அவனுக்கு பெரிய சந்தோசம், எதோ பெரிதாய் சாதித்து விட்டோம் என்பதாக பேசிக்கொண்டான் , 
வழமையாக மூன்று நான்கு மணித்தியாலம் நிக்கவேண்டும் என்று சொன்னான். ஆனால் எனக்கு அப்போது  தான் எதோ பெரிய பாவம் சேர்த்ததான உணர்வு. கால் வலிக்க நிக்கும் அந்த மனிதர்கள் என்ன நினைத்திருப்பார்கள் என்ற தான குற்ற உணர்ச்சி.  

வெளியில் வந்து நான்கு பேருக்கும் ஆயிரத்துஐநூறு கேட்ட அவனின் கணக்கை  பேரம் பேசி ஆயிரம் ரூபாவுக்கும் முடித்து கொண்டோம். . சந்தோசம் தானே சார்  , சந்தோசம் தானே சார் எண்டு மீண்டும் கேட்டு போனான் அந்த தடியன்.  இரண்டு மணித்தியாலம் எங்களோட மினக்கிட்டு அந்த காசு, ஒரு நாளைக்கு இரண்டாயிடம் என்றாலும் ... எதோ கணக்கு எல்லாம் பார்த்து அவன்ட வருட வருமானம் ஐந்து லட்சம் இந்திய ரூபாய்கள்.. எண்டு சொன்ன  டிரோஷன்.  அதுக்கு அவன்ட இன்வெஸ்ட்மென்ட் அந்த வாளி மட்டும் தான்.   இன்கம் டக்ஸ் கட்டுவான் போல.. நாங்க அங்க டிகிரி படித்து கஷ்டப்பட்டு உழைக்கிரத்துக்கு , இங்க வந்து ஒரு வாளி வாங்கினா நிறைய  உழைக்கலாம் போல .. இது டிரோஷனின் கடி.  


மீண்டும் எங்கள் வாகனம் நிறுத்தி இருந்த இடத்துக்கு போன பொது அவள்  நின்றிருந்தாள். நாங்கள் வரும் வரை காத்திருந்து இருக்கிறாள். எங்களை கண்டதும் முகத்தில் எதோ மலர்ச்சி.  சோகம் வழியும் அந்த கண்களில் எதோ ஒரு சந்தோசம். நாங்கள் உடுத்து கழித்த வேட்டிகளை கொடுத்த பொது அவள் காட்டிய ரியாக்சன் வார்த்தைகளை தாண்டியது. அந்தளவு சந்தோஷ உணர்வை அந்த பழைய வேட்டிகள் கொடுக்குதேன்றால், அவளின் வறுமை மட்டம் பற்றி நினைத்துப் பார்த்தேன்.    அனாலும் அந்த வேட்டிகளுக்கான அவளின்  அந்த மூன்று மணி நேர போராட்டம், அதற்கான DETERMINATION வாழ்க்கை தொடர்பான சில புரிதல்களை ஏற்படுத்தி இருந்தது. 

அந்த தடியன், அப்பாவியான அவளின் அந்த சோகமான முகம் இன்னும் கண்களுக்குள் நிக்கிறது .. வாளிகளுக்கும் வேட்டிகளுக்கும் பின்னால் இருக்கிற முரண்பாடான அவர்களின் நிஜ வாழ்க்கை எப்படி இருக்கும் என்று ஜோசித்து கொண்டே மதுரை நோக்கி போகிறேன்...
தொடரும்...     

Tuesday, February 8, 2011

ஈரான் திரைப்பட விழாவும் இடையில் நின்ற படமும்


"Childrens of heaven", "The colour of paradise" என்ற மஜித் மஜிடியின் ஈரானிய திரைப்படங்களை பார்த்திருந்ததால் ஈரான் திரைப்படங்கள் மீது எப்போதுமே ஒரு காதல் இருந்ததுண்டு. மனித நேயத்தையும், மனித உறவுகளின் நெகிழ்ச்சியான கவித்துவ வாழ்வியலை கொண்டவை அவை.

ஈரான் படங்களின் கலரும், மனிதர்களும், சம்பவங்களும் மூடு பனி, வீடு, முள்ளும் மலரும் போன்ற எண்பதுகளின் பாலு மகேந்திரா, மகேந்திரன் படங்களை ஒத்திருக்கும். எதோ ஒரு அழகுணர்ச்சியும், சோகமும் ஒட்டிக்கொண்டு இருக்கும்

சில்ட்ரன் ஆஃப் ஹெவன் பார்த்து பல வருடங்கள் ஆனாலும் இன்னும் மனசில் நிக்கிறது. அண்மையில் கூட கலைஞர் தொலைக்காட்சியில் மீண்டும் கொஞ்சம் பார்த்ததாக நினைவு இருக்கிறது.


சிறுவன் தனது த‌ங்கையின் கிழிந்த ஷுக்களை தைத்துவிட்டு வீட்டிற்கு திரும்புகிறான். வீடு செல்லும் வழியில் கடைக்கு செல்கிறான். உருளைக்கிழ‌ங்கு வா‌ங்கும்போது, கடையிலிருக்கும் உபயோகமில்லாத பிளாஸ்டிக் பைகளுக்கு அருகே ஷுவை வைக்கிறான். அந்த நேரம் கடைக்கு வரும் பழைய பொருட்களை எடுத்துச் செல்பவன் தவறுதலாக ஷுவையும் எடுத்துச் செல்கிறான்.


ஷு தொலைந்துபோன விவரத்தை தந்தையிடம் கூற வேண்டாம் என தங்கையிடம் கூறுகிறான். காரணம், அந்த குடும்பத்தின் வறுமை. காலனி தொலைந்ததை தந்தையிடம் மறைப்பதற்காக அவர்கள் சந்திக்கும் போராட்டமே அந்த படம் . குழந்தைகளின் உலகம் அழகானது, மனசில் பட்டத்தினை அப்படியே செய்கின்ற சந்தோசம், அந்த பருவத்துக்கு மட்டுமே வாய்த்திருக்கிறது. குழந்தைகள் ஒரு விஷயத்தை எத்தனை நேர்மையாக அதே நேரம் தீவிரத்துடன் அணுகிறார்கள் என்பதை கலை அமைதி கெடாமல் சொல்கிறது ம‌ஜித் ம‌ஜிதின் இப்படம்.


திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் பதாகை பார்த்தேன், ஏழாம் திகதி முதல் ஐந்து திரைப்படங்கள் திரையிடுகிறார்கள்.. ஏதாவது ஒன்றாவது பார்த்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் சென்று பார்த்தது தான்.."Children of Eternity "

பாசக்கார அண்ணன், மனநிலை பாதிக்கப்பட்ட தம்பி, வயது போன தாய்.... அழகான காதல், வீட்டோடு இருக்கும் மனநிலை பாதிக்கப்பட்ட தம்பியின் காரணமாக தன் மகளை திருமணம் செய்து வைக்க மறுக்கும் அப்பா. பாசமுள்ள தம்பிக்காக காதலை மறந்துவிட முடியாமல் தவிக்கும் அவர்களின் போராட்டமே அழுத்தம் நிறைந்த இந்த படம்.

மகளை தருவதென்றால் தம்பியை மனநல காப்பகத்தில் சேர்க்குமாறு பணிக்கும் காதலியின் தந்தை, தடுமாறும் ஹீரோ, தவிக்கும் காதல். காப்பகத்தில் அவஸ்தைப்படும் தம்பியின் உணர்வுகள் . காதலை துறந்து தம்பியை மீண்டும் கூட்டிவர முடிவு எடுக்கும் ஹீரோ, அங்கிருந்து தப்பித்து தொலைந்து போகும் மனநினை பாதிக்கப்பட்ட தம்பி... என்று படம் பல திருப்பங்களுடன் தெஹெரன் வீதிகளில் பயணித்து முடிவை நெருங்கும் போது தடைப்படுகிறது படத்தின் டி.வி.டி . மிகுதி பத்தோ பதினைந்து நிமிட படத்தினை எவ்வளவோ முயன்றும் ஓட்டமுடியாமல் போனது இலங்கை திரைப்பட கூட்டுத்தபனத்தினருக்கு.அத்தனை அழகிய படத்தின் முடிவு தெரியாமல் போகின்ற சோகம் வார்த்தைகளில் அடக்கமுடியாதது. படம் பார்த்து வெளியில் வந்த அனைவர் முகத்திலும் எதோ துக்கம் ஒட்டிக்கொண்டு இருந்தது. சிலர் வெளிக்காட்டி கொண்டனர்.

முடிவு தெரியாத பல சம்பவங்களின் தொடர்ச்சி தான் வாழ்க்கை, என்ற யதார்த்தை உணர்த்திசென்றது அந்த அழகான ஈரான் திரைப்படம்.


  
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes