BREAKING NEWS

Like Us

Saturday, July 10, 2010

மதராசப்பட்டினமும், அழகிய தேவதையும்......

முரண்பாடான  முயற்சிகள் எப்போதுமே சுவாரசியமானவை, அழகானவை, வலிகளையும் தாண்டி எதோ ஒரு சுகானுபவம்  தருபவை.ரசிக்கும் படியான வாழ்க்கை சில விதிகளை தாண்டிய எம் முரண்பாடான எண்ணங்களின் வெளிப்படுதல்களிலேயே தங்கி இருக்கிறது.

ஒரு வெள்ளைகார அழகிக்கும், ஒரு  அடிமைப்பட்ட இந்தியனுக்கும் ஏற்படும் முரண்பட்ட , விதிகளை மீறிய அழகிய  காதலும், அதன் எதிர்ப்புக்களும் தான்  மதராசப்பட்டினம் என்ற இந்த காலங்களை கடந்த காவியத்தின்   வன்லைன்.

அதிகம் அறிமுகம் இல்லாத இயக்குனர், ஆர்பாட்டம் இல்லாத நடிகர்கள் , பிரமிக்க வைக்கும் அழகாக வடிவமைக்கப்பட்ட  படத்துக்கான விளம்பரங்கள் ஏற்படுத்திய தூண்டுதல்களையும்  தாண்டி, இது போன்ற நாம் பார்க்காத காலங்களின் கதைகளை கேட்பதிலும் பார்ப்பதிலும் எனக்கு  அதீத நாட்டம் இருக்கிறது. காலனித்துவ காலங்களில் நடந்த சம்பவங்கள், அதன் மனிதர்கள் , அவர்களின்  ஏக்கங்களை வலியோடு சொல்லும்  உணர்ச்சிகள் நிறைந்த சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். அப்படி ஒரு புத்தகம் தான் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய "யாமம்". (யாமம் ஏற்படுத்திய தாக்கம்)  அந்த  புத்தகம்   போலவே நிறையவே மன நிறைவை இந்த படமும் ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பில் படம் பார்க்க சென்றிருந்தேன்.

எதிர்பார்ப்புக்களை விட பிரமாதமாக, ஒரு ஆர்ட் பிலிம்க்கு உரிய சாயலின் அமைந்திருக்கிறது படம்.. படத்தின் தொடக்க பெயரோட்டத்தில் தொடங்கி  பழைய மதரசப்பட்டினத்தை திரையில் கொண்டுவர நிறையவே மினக்கெட்டு இருக்கிறார்கள். பீரியட் படங்களை எடுக்க துணிச்சல் வேணும். அந்த துணிச்சலில் நிறையவே வெற்றியும் கிடைத்திருக்கிறது கெமரமென்னுக்கும், ஆர்ட் டிரேக்டருக்கும். தவிரவும் க்ராபிக்ஸும் , செட்களும் நிறையவே  கைகொடுத்திருக்கிறது. காலத்தை பிரதிநிதித்துவ படுத்த இப்போதும்  இருக்கும் SHELL, COLGATE , HORLICKS, KIWI (நான்  கவனித்தவைகள், மேலும் பல இருக்கலாம்  ) போன்ற சில பிராண்ட்களை பயன்படுத்தி இருப்பது புதுமை. இந்த  பிராண்ட் களுக்கு இந்தளவு பெரிய பாரம்பரியம் இருந்திருக்கிறது என்பதை , இந்த படத்தை பார்த்து தான் தெரிந்து கொண்டேன்.

எனக்கு ஆரியாவை பார்க்க  பரிதாபமாய் இருக்கிறது, மனிதர் என்னமாய் நடித்திருக்கிறார். . தேவையானதை நேர்த்தியாக கொடுத்திருக்கிறார். அனாலும் இந்த படம்  அவருக்கு பெரிய இமேஜ் கொடுக்குமா என்பது கேள்விக்குறியே. இது முழுக்க, முழுக்க கதாநாயகியின் படம், படத்தின் சிறப்பம்சமே டீன் ஏஜ் உலக  அழகியான எமி ஜாக்சன் என்ற அந்த தேவதை, மொத்த பிரேம்களையுயும் தன் அழகால் ஈர்த்து கொ(ல்)ள்கிறது அந்த ஏஞ்சல்.  அவர் தனித்து தெரிவதால் ஆரியா  பல காட்சிகளில் அடிபட்டு போகிறார். பூவுக்கு பிறகு பார்த்த மிக சிறந்த ஹீரோயின் SUBJECT இந்த படம்.

மொழியை வைத்து செய்யும் நகைச்சுவைகள் ஆழமான ரசனைக்குரியவை. படம் நீளமாக இருந்தாலும் திரைக்கதை நேர்த்தியாக  இருப்பது மிகப் பெரிய பலம். 
பின்னணி இசை பற்றி எனக்கு அதிகம் சொல்ல தெரியவில்லை, பாடல்கள் படத்துடன் சில இடங்களில் ஒட்ட மறுத்தாலும், இரண்டு பாடல்கள் காட்சிப்படுத்தப்பட்ட விதம் அழகாய் இருக்கிறது. அதிலும் உயிரே .....என்று தொடங்கும் பாடல் கொள்ளை அழகு. பாடல்களில்  எமி ஜாக்சன் அணிந்திருக்கும்  காஸ்டியும்கள் "காலம்" என்ற கருப்பொருளையும் கணக்கில் வைத்து மிக மிக அழக்காக செதுக்கப்பட்டிருக்கிறது.

எனக்கு என்னவோ, இந்த ஹீரோயினுக்கு கிடைக்கும் வரவேற்பை  பார்த்து இனி வெளிநாட்டு   ஹெரோஇன் தான் வேண்டும் விஜய்களும், சூரியாக்களும் அடம் பிடிப்பார்கள் எண்டு தோன்றுகிறது. இனி தமிழ் சினிமாவின் ஹீரோயினுக்கான தேடல் இந்திய எல்லைகளை தாண்டி உலகமயமாக்கப்படலாம். இன்னும் பல படங்களில் அதே எமி ஜாக்சனை காணலாம் என்றே தோன்றுகிறது.

மொத்தத்தில் பல படங்களின் சாயல் இருந்தாலும், இலகுவாக அனுமானிக்ககூடிய கதையாக இருந்தாலும்,  தனித்து தெரிகிறது  மதராசப்பட்டினம். காரணம் இவராக இருக்கலாம்.

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes