BREAKING NEWS

Like Us

Tuesday, December 22, 2009

அளிமங்கட (The road to elephant pass)

முதன் முதலாக இலங்கை திரைப்பட கூட்டுத்தாபனத்துக்கு முன்னால் இந்த படத்தின் போஸ்டரை பல மாதங்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன்.  
அன்றிலிருந்து, அப்படி இந்த படத்தில் என்ன தான் இருக்கு? என்று பார்த்து விட வேண்டும் என்ற ஆவல் அதிகரித்திருந்தது. வழமை போலவே ஒரு பிரச்சார படமாகவும் , தமிழனை கேவலமாகவும் சித்தரித்து இருப்பார்கள் என்ற எண்ணமே படம் பார்க்கும் வரை இருந்தது.


நான் வேலை செய்யும் இடத்தில் பலரும் இந்த படத்தை சிலாகித்து பேசியதாலும் , சந்திரன் ரத்னம் என்ற பெயருடை ஒருவர் தயாரித்து இயக்கி  இருந்ததாலும் எப்படியும் பார்த்துவிட வேண்டும் எண்டு  முடிவெடுத்து  நண்பர்களிடம் கேட்கலாம் என்றால், சுதாவுக்கு சிங்கள படம் பார்க்கும் அளவுக்கு கிறுக்கு பிடித்து விட்டதோ என்று நினைப்பார்களோ என்று அஞ்சி , தன்னந்  தனியாகவே ரீகல் தியட்டருக்கு போனேன். உலக  சினிமாக்களை தேடும் நம்மில் பலருக்கும், மிக அண்மித்து , மிக தரமான சிங்கள சினிமாக்கள் இருந்தும், அதை பார்க்கும், ரசிக்கும் , பாராட்டும் மனப்பக்குவம் வரவில்லை என்பது  எமக்கிடையே நெகிழ்வுத்தன்மையின் ஆழத்தையே பிரதி பலிக்கிறது.

ரீகல் தியட்டர், பெரிய ஆச்சரியத்தை தந்தது, பழைய காலத்து மாட மாளிகை எப்படி இருக்குமோ அப்படி இருந்தது, எந்தவிதமான நவீன தொழில் நுட்பங்களுக்கும் அப்பாற்பட்டு  இருந்தது. கொழும்பில் தமிழ் படங்களுக்கு இருக்கும் வசூலில் கால் வாசியாவது இந்த திட்டர்களுக்கு கிடைக்குமா என்பது சந்தேகமே?


ஒரு இராணுவ வீரனுக்கும், ஒரு பெண் போராளிக்கும் இடையிலான அழகான காதல் மிக யதார்த்தமான இன ரீதியான அடையாளங்களுடன் சொல்லபட்டிருக்கிறது என்பதே படத்தின் ஒன் லைன்.  நிஹால் டி சில்வா என்ற எழுத்தாளரின் ஆங்கில நாவலை அடிப்படையாக கொண்டு அமைந்திருக்கிறது படம்.

இரண்டாயிரத்து ஓராம் ஆண்டில் நடப்பதாக காட்டப்படும் கதையில், இராணுவத்திற்கான மிக முக்கியமான உளவு செய்தி ஒன்றை கொண்டு வரும் ஒரு பெண் போராளிக்கும் , அதை பெறுவதற்காக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளூடாக அவளோடு சேர்ந்து பயணித்து கொழும்பை வந்தடையும் இராணுவனுக்குமான அபாயம் நிறைந்த பயணமும் ,  அதில் நடக்கும் சம்பவங்களினூடாக நகர்கிறது கதை.

படத்தின் ஆதாரமே , குறித்த இருவருக்கும் இடையிலான வசனங்கள் தான். தமிழர் , சிங்களவர் என்ற எந்த தரப்பையும் குறைத்து பேசாமல் , இன முரண்பாடுகளில்  இருக்கின்ற யதார்த்தினை சுடுகின்ற வசனங்களால் புரிய வைக்க முயன்றமையே நான் இந்த படத்தை அதிகம் ரசிக்க காரணம். மொத்த சனத்தொகையில் எட்டு வீதமே இருக்கும் தமிழர்கள் எப்படி மூன்றில் ஒன்று நிலப்பரப்பை கேட்கலாம் என்பான் அவன்.. ஏமது பாரம்பரியமான நிலத்தில் , சுகந்திரமாக வாழ்வதற்கான உரிமைக்காகவே மட்டுமே போராடுகிறோம் என்பாள் அவள், இது போன்ற ஏராளமான கேள்விகளும் , மிக நேர்மையான நியாயப்படுத்தல்களும், தமிழர் பிரச்சனை, சரியான ஊடகத்தின் ஊடக , மிக பக்குவமாக புரியவைக்கப்பட முயர்ச்சிக்கப்பட்டு இருக்கிறது, அதில் குறித்தளவு வெற்றியும் பெற்றிருக்கிறார் இயக்குனர்.

படத்தில் , குறியீட்டு காட்சிகள், அழகாக செதுக்கப்பட்டிருக்கின்றன, முக்கிய கதா பாத்திரங்கள் இருவரினதும் நடிப்பு அபாரம், அதிகம் நாடகத் தன்மை கொண்ட சிங்கள சினிமாவில் யதார்த்தம் காட்டி நிற்கின்றனர்.  யுத்தம் என்ற கோர முகம் குறைத்து , தமிழ் சிங்கள இனத்தவரான இருவருக்கு இடையில் காதல், அன்பு என்ற முகங்களை இந்த படம் காட்டி நிற்பது, அதிகம் வரவேற்க தக்க ஒன்று.

தமிழ் சிங்கள மக்களிடையே சரியான புரிதலை, நியாயமான தொடர்பாடல் மூலமே ஏற்படுத்த முடியும் , அந்த புரிதல், சகல அடித்தட்டு மக்களையும் சென்றடையுமாயின் , அடுத்த கட்ட போராட்ட வடிவம் என்றதற்கான தேடல் தேவையற்று போகலாம், அந்த பணி இது போன்ற சிறந்த ஊடகத்தின் ஊடாகவே இலகுவாக இருக்கும், மொத்தத்தில் பேதம் மறந்து பார்க்க வேண்டிய படம் அளிமங்கட

Saturday, December 5, 2009

புறாவே நில்லுன்னு சொன்னேன், கனாவாய் ஓடி மறைந்தாய்........


புறாவுக்கு தன் தொடையில் ஒரு பகுதியையே வெட்டி அளித்தான் சிபிச்சகரவர்த்தி எண்டு நான்காம் வகுப்பு சமயபாட புத்தகத்தில் காட்சிப்படங்களுடன் படித்திருக்கிறேன். அதன் பின்பு வேறு ஒரு சமயத்தில் முல்லைக்கு தேர் கொடுத்தான் பாரி எண்டும் படித்திருக்கிறேன். அன்றிலிருந்து இந்த சிபியும் , பாரியும் என் நீண்ட கால ஹீரோக்களாகவே இருந்து வந்தார்கள்...

இந்த கதையின் நாயகனும் நாயகியும் இரண்டு புறாக்களே ஆனாலும் இங்கு கதை பன்னிரெண்டாம் நூற்றாண்டுக்கு செல்லவில்லை . மாறாக ஸ்டேஷன் ரோட்டில் இருக்கும் என் பிளாட்டின்ஆறாம் மாடியில் தான் நடக்கிறது. பூகோள வெப்பமடைதல் , ஓசோன் படலத்தில் ஓட்டை விழுதல் போன்ற அறிவியல் காரணங்காளால் மனித வாழ்கை மட்டுமன்று , விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் சாதாரண வாழ்கையும் " இலங்கை தமிழர்களை போலவே " அகதி வாழ்க்கை தான்.

முன்பெல்லாம் , பம்பலபிட்டி கதிரேசன் கோவில் கோபுரம் , வஜிராபிள்ளையார் கோவில் , பம்பலபிடிய அரச தொடர் மாடி குடியிருப்புகளிலேயே அதிகமான புறாக்களா காண முடியும். அனால் இப்போது தமிழர்களை விட அவர்கள் கும்பிடும் கடவுளருக்கு வசதி வைப்புக்கள் கூடி விட்டதாலும், எப்போதும் கோவில் பகுதிகளில் கட்டுமான வேலைகள் நடை பெறுவதாலும் இந்த புறாக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு விட்டது. எனவே அவை வெள்ளவத்தை போன்ற நிறையவே பிளாட்டுகள் இருக்கும் பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றன.

இப்படியாக இடம் பெயர்ந்து வந்த ஜோடிப் புறாக்கள் இரண்டு ஆறாம் மாடியில் இருக்கும் என் அறையின் சன்னல் சுவர் விளிம்பில் அடிக்கடி காதல் மொழி பேசிக்கொண்டு இருந்தன. அட்டிக்கடி குருகுருத்துக்கொண்டு இருப்பது கொஞ்சம் இடைஞ்சலாக இருந்தாலும்.. அட இரண்டு புறாக்கள் தானே , அவையாவது சந்தோசமாக இருக்கட்டுமே என்று அலட்சியமாக இருந்துவிட்டேன். இப்படி சிலகாலம் கழித்து திடீரெண்டு பார்த்தால் ஒரு கூடு இரண்டு முட்டை வேறு சுவர் விளிம்புக்கு வந்து விட்டது. புறாக்கள் காதல் மொழி மட்டும் அல்ல குடும்பமும் நடத்தியிருக்கிறது என்று அறியும் நுண்ணறிவு பெரும் அளவுக்கு ஜியோக்ரபிக் சேனல் பார்ப்பது இல்லை என்பதால் எனக்கு குறைவு தான்.

புறாக்களால் துர்நாற்றம் எடுக்கும், கூட்டையும் முட்டைகளையும் வீசி விடுங்கள் எண்டு பக்கத்து வீட்டு aunty எச்சரித்து கூடியும் ...முட்டை போட்டு விட்டது கொஞ்சு பொறித்து இன்னும் கொஞ்ச நாளில் போய்விடும் என்று அப்பாவும் கூட பரிதாபம் காட்டினார். சரி அடுத்து புறா சில நாட்கள் ஆடைகாத்து குஞ்சு பொறித்த பின்பு தான் வில்லங்கம் விபரீதமானது எண்டு விளங்கியது. என் அறைக்குள் போகவே முடியவில்லை. துர்நாற்றம் தூக்கி வாரியது. என்றாலும் என் சின்ன வயது ஹீரோவான சிபிச்சக்கற வர்த்தி தொடை அறுத்து கொடுக்கையில் , நான் என்னை நம்பி வந்த புறாவுக்கு அடைக்கலம் கொடுத்து கொஞ்சம் திருப்ப்திப்பட்டுக்கொண்டேன். இந்த விடயம்சம்பந்தமாக என் கீழ் விட்டுகாரான நண்பர் கோபன் எந்த முரண்பாடும் தெரிவிக்கவில்லை. பாவம் அவரும் என் அளவுக்கு பாதிக்கப்பட்டார்.

இந்த நிலையில் துர்நாற்றம் வருகிறது , புறாக்களை தரித்து நிற்க விடாமல் துரத்துவது ஒவ்வொரு குடியிருப்பாலரினதும் கடமை எண்டு ப்ளாட் நிர்வாக குழு கூடி முடிவும் எடுத்து (இது போன்ற முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களுக்கு தான் கூடுவார்கள்) அறிவித்தல் பலகையிலும் ஒட்டி விட்டார்கள் . அப்போதும் அந்த வில்லன்களை எல்லாம் எதிர்த்து பொறுமை காத்தேன் . புறா குஞ்சுகளும் வரர்ந்தது , தாய் புறா முதல் கொஞ்ச நாள் உணவு கொடுத்தாலும் , பின்னர் வருகையை குறைத்துக்கொண்டது. நானும் ஒவ்வொரு நாளும் எப்படா இந்த புறாக்கள் பறந்து போகும் எண்டு பாத்துக்கொண்டே இருந்தேன்.

இப்படி ஒரு நாள் , நான் காலையில் கண்விழித்து பார்த்த பொது , நிறையா காகங்கள் கத்திக்கொண்டு நின்றன.. சில புறாக்களும் நின்டிருந்தன . எதோ அசம்பாவிதம் நிகழ்ந்தது போல காகங்கள் கத்தின. சன்னலை திறந்து பார்த்தேன் புறாக்களை காணவில்லை. அவசரமாக மொட்டை மாடிக்கு ஓடி போனேன் , ஒரு நாற்பது காகங்கள் , பத்து புறாக்கள் வேறு ஒரு புறமும் நின்றன. ஒரு மூலையில் தலை இல்லாத குட்டி புறாவின் சடலம் கிடந்தது, அந்த பத்து புறாக்களும் வெளிப்படுத்திய சோகத்தை எனக்கு எந்த காலத்துக்கும் மறக்க முடியாது. மற்றைய புறாவுக்கு என்ன நடந்தது எண்டு தெரியாது .. ஆனாலும் அந்த காகங்கள் தூக்கி போயிருக்கலாம் என்பது என் அனுமானம்....ஆனாலும் அந்த புறாக்களின் இழப்பால் துக்கம் தொண்டையை அடைத்தது , அன்றைய நாள் முழுவதும் ஒரு வெறுமையாவே இருந்தது. நான் பார்த்து வளர்ந்த ஒரு புறாவின் நேரடி இழப்பும் அதன் வலியும் நீங்க நிறைய நாள் எடுத்தது.

ஆனாலும் , இந்த உலகத்தில் நிறைய பேர் அடுத்தவனை கொன்றே வாழ நினைக்கிறார்களே. கொலைகள் சாதாரணமாக நடக்கிறதே , ஆயுத கலாச்சாரம் நாட்டின் கலாச்சாரமாகி போகிறதே. இரத்தம் படிந்த கைகளால் உணவு அருந்துகின்றர்களே , இன்னும் பலர் தாங்கள் வெளிநாடுகளில் சந்தோசமாய் வாழ்ந்து கொண்டு ...எங்கேயோ அப்பாவிகள் கொல்லப்படுவதை ஊக்கப்படுத்துகிரார்களே.இன்னும் நாடுகள் ஆயுதம் கொடுத்து போரை , அழிவை ஊக்கப்படுதுகின்றனவே.சர்வதேச சமுகம் எப்போதும் வேடிக்கை மற்றும் கண்டனம் மட்டும் தெரிவிக்கிறதே. இவர்களுக்கு எல்லாம் இழப்பின் வலி எப்போது விளங்கும் ?

Friday, December 4, 2009

"நாளைய திலகம்" டிரோஷனுக்கு பாராட்டு விழா

பக்கத்தில் இருக்கிற வாக்களிப்பு நிலையத்துக்கு சென்று வாக்களிக்க முடியாம, வீட்டுல நித்திர கொள்ளுற ஆக்கள் இருக்கிற இந்த ஊருல, அவசர வேலைகளுக்கும் இடையில போகவர நானூறு கிலோமீட்டர் தூரம் வவுனியாவுக்கு பயணம் செய்து, பெரும்தொகையான பணம் செலவு செய்து, வாக்களித்து விட்டு ஒரே நாளில் திரும்பி வந்த டிரோஷனின் ஜனநாயக உணர்ச்சியை இந்த உலகம் வியந்து பார்க்கிறது. தோத்துப்போன பொன்சேகாவுக்கு அவர் காட்டிய அபரிமிதமான பாசம், கொள்கை மீது அவர் கொண்ட உறுதிப்பாடு என்பன இன்னும் ஏழு ஏழு சந்ததிக்கு தமிழர்கள் படிக்க வேண்டிய கட்டாய பாடம்.



இவரின் இது போன்ற சாதனையை பாராட்டி, பட்டம் சூட்டி , பதக்கம் வழங்க வேண்டியது எதிர்கால தமிழரின் அரசியல் அபிலாசையை வென்றெடுப்பதற்கான முதல் படி. ஒரு வாக்கு தானே என்று அலட்சியப்படுத்தாமல் ஒட்டு மொத்த தமிழரும் சேர்ந்தால் தான் பலம் என்று நிருபிக்க அவர் காட்டிய ஆர்வத்தின் மூலம் , தமிழினத்தின் விடிவெள்ளியாக வலம் வருகிறார்.



காரணமே இல்லாமல் வோட்டுப்போடாத தலைநகரத்தின் உணர்வில்லா தமிழர்கள், எத்தனையோ மல்டிபரல்கள் , கிபிர் விமானங்கள் பார்த்திருந்தும், இரண்டு மூன்று கைக்குண்டுகளுக்கு பயந்து தமது வாக்குரிமையை பணயம் வைத்த உணர்விருந்தும் துணிவு வராத தமிழர்களுக்கு இடையில் வன்முறைகளுக்கு மத்தியில் வாக்களித்த டிரோஷன் சரித்திரத்தில் இடம்பெற வேண்டியவர்.



அடிமைப்பட்டு இருக்கும் தமிழரின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க வேண்டிய முக்கியமான தேர்தலில், இனவாத பிரசாரங்களுக்கு மத்தியில் , கூட்டமைப்பையும் பங்காளியாக்கி போட்டியிட்ட பொன்சேகா தப்பித்தவறி ஒரு லட்சம் , ஐம்பதினாயிரம் வோட்டு வித்தியாசத்தில் தோற்றிருந்தால் எம்மை நம்பி சம்பந்தம் பேசியவர் பெருத்த அவமானம் அல்லவா அடைந்திருப்பார். வடக்கில் இருபதுக்கும் குறைவான வீதம் மட்டுமே வாக்குகளை பதிவாக்கி எங்கேயும் எப்போது தமிழர்களை நம்பி ஒண்டு செய்யக்கூடாது எண்டு இரண்டாவது தடவையாக உலகுக்கு காட்டிய எம்மிடையே டிரோஷன் போன்ற போன்ற வீராதி வீரர்களும் இருக்கிறார்கள் என்பது மிக்க மகிழ்ச்சி தரும் விடயம்.



வெளிநாடு சென்றவர்கள், வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் தவிர்த்து அறுபது வீத வாக்குப் பதிவுக்கான வாய்ப்பு இருந்தது, அப்படியும் எம் சனம் உறுதியாக ஒன்று பட வில்லை என்பது அரசியல் ரீதியாகவும் எமக்கு தீர்வு பெரும் திராணி இல்லை என்பதையே குறியீடாக காட்டுகிறது. எனவே இனிவரும் காலங்களில் தேர்தல்களை தவிர்த்து , பெரிதாய் ஆர்ப்பாட்டம் பண்ணாமல் ஒற்றுமையாய் அடிமைப்பட்டு வாழ்வோம் என்று நினைக்கையில் , இப்படி டிரோசன் போன்ற இளம் சிங்கங்களும், இது போல உணர்வுடன் வாக்களித்த பலரும் எதிர்காலத்த மாத்த புறப்பட வேணும்.



எனவே அவரின் இன உணர்வையும், பொறுப்புணர்வையும் வியந்து கொண்டாடும் அன்னாரின் பாராட்டு விழாவுக்கு , முதல்கட்டமாக ஐநூறு ரூபா நிதி உதவி அளிக்கிறேன் , மேலும் பல அன்பர்கள் நிதி உதவி அளிப்பதன் ஊடாக அன்னாரின் பாராட்டு விழாவிலும் , தொடந்து நடைபெறும் விருந்து உபசாரத்திலும் கலந்து கொள்ளலாம், நிதி அளித்தவர்கள் மட்டுமே விழாவில் கலந்து கொள்ளலாம் என்பது குறிப்பிட தக்கது.. தகுந்த நிதி சேரும் இடத்து பாராட்டு விழா வெள்ளவத்தையில் உள்ள நல்ல சாப்பாட்டு கடையில் நடைபெறும்.
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes