BREAKING NEWS

Like Us

Thursday, July 30, 2009

சில நேரங்களில் சில மனிதர்கள்

உலகில் கடினமான ஒன்று உண்டென்றால் அது மனிதர்களையும் அவர்கள்முகங்களையும் புரிந்து கொள்வது தான். நாம் கடந்து வரும் நட்புக்களிலும் உறவுகளிலும் எவ்வளவு போலித்தனம் ஒட்டியிருக்கிறது என்பது சில சமயங்களில் தெரியாமலே போய்விடுகிறது. எவ்வளவு போலியாகவும் , பகட்டாகவும் வாழ்கின்றோம் என்பதை பல சமயங்களில் எம் மனசாட்சி கூட ஏற்றுக்கொள்வதில்லை. திருத்தி கொள்ள அனுமதிப்பதும் இல்லை.

மனிதர்கள், பிறர் பற்றிய அறிதல்களிலும் , அவர்கள் தொடர்பான செய்திகளிலும் சம்பவங்களிலும் ஆர்வங்கொண்டு பின் அடிமையாகி பின்னர் அதுவே வாழ்கை என்றாகி விடுகிறது. அடுத்தவர் பற்றிய ஆய்வு இல்லாமல் மனிதனுக்கு வாழ்வு சுவாரசியம் இல்லாமல் போனதற்கு, எமது சமூக அடிப்படையில் தளர்வு உள்ளதென்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதை தான் பாரதி
" தேடி சோறு நிதம் தின்று
பல சின்னஞ் சிறு கதைகள் பேசி
மனம்வாடி துன்பம் மிக உழன்று
பிறர்வாட பல செயல்கள் செய்து
நரைகூடி கிழப் பருவம் எய்தி -
கொடும்கூற்றுக்கு இரையென மாயும்
பல வேடிக்கை மனிதரை"
என்றான்.

இந்த வேடிக்கை மனிதரை பற்றி அதிகம் அல்லட்டிக் கொள்ளாமல் , எமக்கு எமக்கு எது சரி என்று படுகிறதோ அதை தனித்தே செய்யவேண்டும், உலகம் ஆயிரம் சொல்லும், எனக்கான வழியில் நான் சரியாக சென்றுகொண்டிருந்தால் இந்த சில வேடிக்கை மனிதர்களால் என்ன செய்து விட முடியும்?

சில நேரங்களில் சில மனிதர்கள், கடந்த காலங்களில் என்னை அதிகம் கவர்ந்த தலைப்பு. இது எழுபதுகளில் ஜெயகாந்தன் எழுதிய அற்புதமான நாவல். சாகித்திய அகாடமி விருது கூட கிடைத்தது அவருக்கு . பின்னர் பீம்சிங் இயக்கத்தில் லக்ஷ்மி , ஸ்ரீ காந்த், நாகேஷ் நடிப்பில் திரைப்படமாக கூட வெளிவந்தது. அன்றைய எழுத்தாளர்கள் எப்படி நவீனத்துவமாக சிந்திக்கிறார்கள் என்பதற்கு திரைப்படமாக கூட வந்த நாவல் ஒரு நல்ல உதாரணம்.

இது போன்ற படங்களெல்லாம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பபடுவதை நான் பார்த்ததில்லை, பாவம் அவர்களுக்கு விஜய் , சிம்புகளோடு மாரடிக்க காலம் போதாதபோது தரமான தேடல்களுக்கு எங்கு நேரம்.

கங்கா(லக்ஷ்மி) என்ற பெண் பாத்திரத்தை மையமாக வைத்து நகருகிறது கதை, படத்தின் முதல் காட்சியில் கெடுக்கப்படுவதாக காட்டப்படும் ஒரு பெண்ணின் போராட்டங்களும் புரிதல்களுமே படத்தின் ஒன்லைன். ஆனாலும் பக்கம் பக்கமாக வீர வசனம் பேசாமல் , யாரையும் பழிவாங்காமல் கதை நகர்த்தப்பட்ட முறையே புதுமையிலும் புதுமை. மிக சொற்பமான மனிதர்களையும் அவர்களின் பாசாங்கான உறவுகளின் யதார்த்தத்தை காட்டி நிற்கிறது படம். எழுபதுகளில் வந்த படத்தில் dating, living together பற்றி வசனங்கள் இருப்பது எவ்வளவு புதுமை என்பதற்கு நல்ல சான்று. நான் இதெல்லாம் எதோ இருபத்தோராம் நூற்றாண்டின் கண்டுபிடிப்பு என்று இதுவரை நினைத்துக் கொண்டு இருந்தேன்.

பிரமிட் நிறுவன வெளியீடான இந்த படம், தரமான டி.வி.டி களாக கிடைக்கிறது. இங்கும் கூட வெள்ளவத்தை மோஹான்சில் கிடைக்கிறது. இப்படத்தை சிபாரிசு செய்து பார்க்க உதவிய நண்பர் ரிஷங்கனுக்கு நன்றிகள்.








Wednesday, July 29, 2009

அர்த்தம் உள்ள இந்து மதம் : எழுதுவது அனானி

இந்து மதத்தில் அர்த்தம் உண்டா என்று கேட்டு ஒரு பதிவு எழுதியிருந்தேன், பல பேருக்கு அசொகரிகங்களையும் , வெறுப்புக்களையும் கொடுக்கும் சர்ச்சையான விஷயம் தான்.
அனாலும் பல பேர் அதை வாசித்து பாராட்டியும் இருந்தனர். சில பேர் ஏன் கருத்தை மறுதலித்து பின்னூட்டம் இட்டிருந்தனர். அப்படி ஒரு நியாயமானதும் , பக்குவமானதுமான ஒரு பின்னூட்டம் ஒரு அநோனியிடம் இருந்து வந்தது. எப்படி எனக்கு பலரின் நம்பிக்கைககளை கேள்வி கேட்க உரிமை உள்ளதோ, அந்த நம்பிக்கைகளை நிலை நிறுத்த உரிமை அநோனிக்கு கூட உள்ளது என்பதால் அவரின் மறுப்பு கருத்துக்களை ஒரு பதிவாக்குகிறேன். ( அனோனி அனுமதிப்பாராக)



சிந்தனையை தூண்டும் கருத்துக்களுக்கு நன்றி. என்னுள் தோன்றிய சில கருத்துக்களை பரிமாற அவா கொண்டு இந்த பதிவு. என்னுடைய கருத்துகள் பழமையானவையாய் இருந்தாலும் நான் மாற்றங்களை ஏற்று கொள்பவனே! தேங்காயை 40/= மதிப்புள்ள உணவாக நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் வேறு எந்த பழத்திலும் இல்லாத தனித்துவம் அதற்கு உண்டு. அது தான் அக்கண்கள். அதனை உடைக்கும் போது எம்முள் உள்ள ஆணவம், சுயநலம், ஆசை, பொறாமை போன்ற தீய குணங்களை உடைத்து இறைவனுக்கு அற்பனிக்கின்றோம்.


பால் குடம் பற்றி கூறியிருந்தீர்கள். எமது பாவங்களை எல்லாம் அவள் தனதாக ஏற்று கொண்டு அருள்கடாட்சம் புரியும் அவளிடம் எம்மால் வந்த பாவங்களை அந்த பாலாபிஷேகம் மூலம் தீர்க்கிறோம். அதனை நாம் பெற்று இல்லாதோருக்கு கொடுப்பது அந்த பாவங்களை கொடுப்பது போன்றது என்கிறது சிவா மரபு.கிரனைட் கல்லால் கோயில் கட்டுகிறார்கள், நாற்பது லட்சம் செலவில் தேர் கட்டுகிறார்கள் , கடவுள் சிலைக்கு வைர அட்டியல் போடுகிறார்கள். இதை எல்லாம் கடவுள் கேட்டாரா? அந்த அம்மன் 1987 ஆம் ஆண்டு எப்படி இருந்தால் என்று எனக்கு தெரியும். பக்தர்கள் பெருக பெருக, கோவில் வளர்ச்சி அடையும். அந்த அம்மன் கோவில் நிர்வாகம் நடாத்தும் அறநெறி பாடசாலையில் இலவசமாக எத்தனை மாணவர்கள் சைவம் பயில்கிறார்கள்? கலைகூடத்திலும் தியான மண்டபத்திலும், நூலகத்திலும் எத்துனை விடயங்களை அமைதியை பெறுகின்றோம். கோவில் வளர்ச்சி பெற்றது தவறா? நீங்கள் கூறுவதை பார்த்தால் i.b.c road பிள்ளையார் கோவில் மட்டும் தான் கோவிலா? அதுவும் சிறிது காலத்தில் வளர்ச்சி அடைந்த பின் என்ன கூறுவீர்கள்? கோவில் குருக்கள் கலோரி பற்றியோ அல்லது போஷாக்கின்மை பற்றியோ அறிந்திருக்கவில்லை மாறாக அவர் அந்த மக்களுக்காக இறைவனிடம் தினம் பிரார்த்திப்பார் அது தான் அவர் வேலை.


பிசைகாரகளுக்கு நாம் கொடுக்கும் வரை அவர்கள் இவ்வுலகில் இருப்பார்கள். அப்படி ஒரு சமுதாயத்தைச் உருவாகிய பெருமை எமக்கே சேரும். எம்மிலிருந்து அவர்கள் எந்த வகையில் தாழ்ந்தவர்கள். தீண்டத்தகாதவர்களா? அவர்கள் தொழில் செய்ய முடியாதா? அவளை ஸோம்பெரி ஆக்கியது மட்டுமல்லாது அவள் மகளையும் கண்ணிருந்தும் குருடனாக்குகிறது உங்கள் சமூகம். காத்திருந்து செவிடனாகுகிறது.


உடலை வருத்தி அவர்கள் காவடி எடுப்பது எந்த வகையில் இந்து மதத்தை அர்த்தமற்றதாகுகிறது. atleast தனி மனித உரிமையில்லை தலையிடாமல் இருப்பமே? மனதை ஒறுத்தி இறைவனை நாடலாம் முடியாதவர்கள் உடலை ஒறுத்தி நாடுகிறாகள். விட்டுடுவமே? சரி ஆபிரிக்க பழங்குடியினர் வேட்டையாடி மாமிசம் உண்கிறார்கள். நாம் வேட்டயாடுவதில்லை ஆனால் உண்கிறோம். எமக்கும் அவர்களுக்கும் வித்தியாசம் இல்லையா?

இறைவன் இவை அனைத்தையும் கேட்கவில்லை. மாறாது அன்பையும் தன்னை மறக்காத நெஞ்சையும் மட்டுமே கேட்கிறார். அதற்காக அந்த பக்தர்களையும் அந்த இறைவனையும் விமர்சிப்பது உண்மைக்கு தொலைவானது. உங்கள் பாஷயிலையே பேசினால் அந்த கணமாவது இறைவனை நினைகிறார்கள் இந்த கொடிய உலகில் என்று நிம்மதியாய் இருப்போம். நீங்கள் தானே உங்கள் முந்தய "இன்னும் இனி என்ன செய்ய போகிறோம்? " பதிவில் பொருளாதாரத்தை முனேற்றவும் மாற்றத்தை ஏற்கவும் கூறினீர்கள். இந்த சந்தர்பத்திலாவது இலங்கை government, எம்மக்களின் சக்தியை அறியட்டுமே. இந்து மதத்திற்கு அர்த்தமுண்டு. தெய்வம் நின்று கொல்லும் அண்ணா... காத்திருங்கள் நம்பிக்கையுடன்...

Sunday, July 26, 2009

இந்து மதத்துக்கு அர்த்தம் இருக்கா?

பஸ்ஸில் சென்று கொண்டிருக்கிறேன் , பஸ் மெதுவாக ஊர்ந்து கொண்டிருந்தது , முன்னாலே மயுரா அம்மன் தேர் பவனி வருவது தான் காரணம் என்பது யாரும் சொல்லாமலேயே புரிந்திருந்தது. வெள்ளவத்தையை நெருங்கும் போது ஊரே விழாக்கோலம் கொண்டிருப்பதாய் பட்டது. தேருக்கு பின் பெரும் கூட்டம் அரோகரா பாடிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. பஸ்ஸில் சென்ற எல்லோரும் எட்டி எட்டி பார்த்தார்கள் , காவடிகளாகி தங்களை வருத்தி கொள்ளும் பலரும் அவர்கள் கவனத்தை ஈர்த்திருந்தார்கள்.



வெளிநாட்டு காசு மாத்தும் கடைக்கு முன்னால் பஸ் கன நேரம் நிண்டது. கடைக்காரர் நல்ல பழுத்த வாழைக்குலையுடன் இரண்டு பக்கமும் வாழை மரம் கட்டியிருந்தார். கடைக்கு எதிரே நடைபாதையில் ஒரு பிச்சைக்காரி அருகில் மூன்று வயது மதிக்க தக்க அவளது குழந்தை. அவர்களை இதற்கு முதலும் எங்கேயோ சிக்னல்களில் இரந்து கொண்டு நிற்பதை பார்த்ததாக நினைவு இருக்கிறது.


அவள் கையை மட்டும் நீட்டி தன்னை கடந்து போகின்றவர்களிடம் எதோ கேட்டுக்கொண்டு இருந்தாள். அவள் குழந்தை சத்தம் போடும் காவடிகளோடு செல்லும் கூட்டத்தையும் , இடை இடையே தன் தலைக்கு மேலே கட்டி இருக்கிற வாழைப்பழத்தையும் வேடிக்கை பார்த்து கொண்டு இருந்தது. தேரில் செல்லும் அம்மன் , பின்னால் சேவித்துக்கொண்டு செல்லும் கூட்டம் யாருமே அந்த இருவரையும் கண்டு கொண்டதாக தெரியவில்லை. தேரும் கூட்டமும் நகர்ந்து கொண்டு தான் இருந்தது. பிச்சைகாரி ஏன் கண்ணில் இருந்து மறையும் வரை இரந்து கொண்டு தான் நின்றாள். அனால் அந்த காட்சி மட்டும் ஆயிரம் முரண்பாடுகளை தோற்றுவித்திருந்தது...

தேர் போகும் வழி நெடுகிலும் ஓராயிரம் தேங்காய்களாவது உடைத்திருப்பார்கள். அதன் பின் அந்த தேங்காய்க்கு என்ன நடக்குது என்பது பற்றி எல்லாம் எனக்கு தெரியாது. ஆனால் நாற்பது ரூபா பெறுமதியான ஒரு உணவு பொருளை வெறுமனே வீணாக்குவதன் தாற்பரியம் என்ன.?
இது எல்லாம் செய்ய சொல்லி கடவுள் எங்களை கேட்டாரா?


மூவாயிரம் பேர் பால் குடம் எடுத்தார்கள்.. ஒரு குடத்தில் மூண்டு லீற்றல் பால் என்றாலும் , எதனை ஆயிரம் லீற்றல் பால் அம்பாளுக்கு பாலபிசேகம் என்ற பெயரில் வீணாக்கப்பட்டது.? இப்படி செய்யச் சொல்லும் பக்தியை என்ன பெயர் கொண்டு சொல்வது? எத்தனை ஆயிரம் குழந்தைகள் இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் போசாக்கில்லாமல் இருக்கின்றன என்ற புள்ளிவிபரம் பால் குடங்களை வாங்கி ஊற்றும் வேதம் படித்த குருக்களுக்கு தெரியுமா? ஒரு மில்லி லீட்டர் பாலில் எத்தனை கலோரி இருக்கேன்பது அதை வாங்கி விரையமாக்கும் எத்தனை பக்த கோடிகளுக்கு தெரியும் ?

கிரனைட் கல்லால் கோயில் கட்டுகிறார்கள், நாற்பது லட்சம் செலவில் தேர் கட்டுகிறார்கள் , கடவுள் சிலைக்கு வைர அட்டியல் போடுகிறார்கள். .இப்படி எல்லாம் ஆடம்பரங்களுக்குள் இருக்கும் கடவுளரை சத்தியமாக என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. ரத்மலானையில் உள்ள பெற்றோரை இழந்த சிறுவர்கள் படிக்கும் விடுதி ஒன்றுக்கு சென்றிருந்தேன். ஒரு குட்டி அறையில் நாற்பது பேர் தங்கி இருக்கிறார்கள். அவர்களுக்கு கிழமையில் ஒரு நாள் விஷ்ணு கோயிலில் இருந்து சோறு போகிறது. (அங்கேயும் கடவுள் தான் அனுப்பி வைக்கிறார்) அந்த ஒரு நாள் சாப்பிடும் நல்ல சோறுக்காக ஆறு நாள்காத்திருக்கிர்றார்கள் இந்துக் குழந்தைகள் . அவர்களுக்கு வசதி செய்து கொடுக்க நிதி போதியளவு இல்லையாம். பசித்த வாய்க்கு சோறு போடும் மனிதர்கள் குறைவாக இருக்கிறார்கள், ஆனால் கடவுளருக்கு வசதி செய்ய நிறையவே கனவான்கள் காத்திருக்கிறார்கள்.

இது தான் நான் பின்பற்றும் மதத்தின் வெளிப்பாடுகள் என்னும் போது. அந்த மதமும் அதனை பின்பற்றும் நாமும் எவளவு தூரம் நியாயமானவர்கள் என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை .இது போன்ற பகட்டான சம்பிரதாயங்களாலும் சடங்குகளாலும் தெய்வ அனுக்கிரகம் கிடைக்கும் நான் சார்ந்த மதத்தவர்கள் நம்பும் போது, இந்த மதத்தில் அர்த்தம் இருக்கா என்று தலைப்பிடுவதில் எனக்கு முரண்பாடுகள் இல்லை .


மதம் என்ற ஒன்றையும் அதன் நம்பிக்கைகளையும் மதிக்கிறேன், ஆனால் அதன் உள்ளீடுகள் அபத்தமாக இருப்பதை தான் ஏற்றுக்கொள்ள முடிய வில்லை. உடலை வருத்தி காவடி எடுக்கும் நாகரிகமடைந்த எமக்கும் , ஆபிரிக்காவில் வாழும் பழங்குடியினர் என்று டிஸ்கவரி சனேளில் காட்டும் காட்டு வாசி மனிதர்களுக்கும் என்ன வித்தியாசம்.

இதே மதத்தில் தானே மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த திருமூலர் சொல்லிவைத்தார்.

உள்ளம் பெருங்கோயில்
ஊனுடம்பு ஆலயம்
வள்ளல் பிரானார்க்கு வாய்கோபுர வாசல்.
தெள்ள தெளிந்தார்க்கு சீவன் சிவலிங்கம்,
கள்ளபுனைந்துனுன் காலமணி விளக்கே ..

அந்த திருமூலரை எத்தனை தீவிர இந்துக்களுக்கு தெரியும்? அது போன்ற வழிபாட்டு முறைகளும் , எளிமையான மத அணுகுமுறைகளும் ஏன் தீவிரப்படுத்தப்படவில்லை ? வியாபார ரீதியாக பலன் தராது என்பதாலா ?

Wednesday, July 15, 2009

முகமூடி வீரர் மாயாவி தோன்றும் ராணி காமிக்ஸ்கள்.

பழைய புத்தக கடைக்கு போயிருந்தேன், வெள்ளவத்தையில் உள்ள டயலொக் சர்வீஸ் செண்டேருக்கு பக்கத்தில் உள்ளது அந்தக்கடை .ஏராளமான ஆங்கில , தமிழ் புத்தகங்கள் அங்கு உள்ளன. அதை நடாத்திவரும் வேற்று மொழி பேசும் மனிதர் புத்தகத்தின் பெறுமதியை அதன் தடிப்பத்தை வைத்தே மதிபிடுவார். புத்தகம் கிழியாமல் கொள்ளாமல் இருந்தால் அதிகம் விலை சொல்லுவார். அதிகம் சேதமான மிக நல்ல எழுத்தாளரின் புத்தகத்தை கூட குறைந்த விலைக்கு முடித்துக்கொள்ளலாம்.

அப்படி ஒரு நாள் போன போது , குமுதம் ,ஆனந்த விகடன் , ஒரு சில பழைய "பக்தி" சஞ்சிகைகளுக்கு இடையே சில ராணி கொமிக்ஸ்கலும் கிடந்தன. கிட்டத்தட்ட பத்துப் பன்னிரண்டு வருடங்களுக்கு பிறகு இந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களை பார்கிறேன். ஒரு பெண்ணின் முக முத்திரை பதித்த ராணி கொமிக்ஸ் புத்தகங்கள் இன்னும் வெளிவருகின்றனவா என்பது தெரியவில்லை. அதில் கிடந்தவை இரண்டாயிரத்து இரண்டு மூன்று காலத்தில் வெளிவந்தவை.

ராணி கொமிக்ஸ் மீதான ஏன் ஈடுபாடு ஆறாம் , ஏழாம் ஆண்டுகளில் மிக அதிகமாக இருந்தது. எட்டாம் ஆண்டுகளில் அதை படித்திருந்ததாக எனக்கு நினைவு இல்லை. அதற்கு பிறகு இண்டைக்கு தான்
முகமூடி வீரர் மாயாவி வாழ்ந்திருந்த ராணி கொமிக்ஸ் புத்தகத்தை பார்க்கிறேன். ஹாரி போட்டார்கள் , அனிமேசன் படங்கள் எல்லாம் வெளிவராத அந்தக்காலத்தில் ஏன் கனவுலக ஹீரோவாக இருந்தது மாயாவி தான். அவர் குத்தினால் தாடையில் மண்டை ஓட்டு குறி பதியும் , அதை அளிக்கவே முடியாதாம், என்ன தான் பிரச்சனை இருந்தாலும் கடைசி நேரத்தில் நம்ம விஜயகாந்த், எம்.ஜி. ஆர்ர் போல மாயாவி வந்து காப்பாற்றி விடுவார். மாயாவிக்கு ஒரு கேர்ள் பிரேண்டும் , சில உதவியாளர்களும் இருந்ததாக நினைவு இருக்கிறது. மாயாவியும் கேர்ள் பிரேண்டும் தங்க கடற்கரையில் குளிப்பதாக படங்களுடன் வரும் காட்சிகள் சில கிளுகிளுப்பையும் ஏற்படுத்தியிருக்கின்றன அந்த காலங்களிலேயே...

என்னை போலவே பாடசாலையில் நிறைய பேர் ராணி கொமிக்ஸ் பைத்தியங்களாகவே திரிந்தார்கள். யார் அதிகம் வாசித்தார்கள் என்று போட்டியே நடக்கும். பாடம் நடக்கும் போது கூட கொப்பிக்குள் வைத்து சிலர் வாசித்து டீசெரிடம் அடியும் வாங்குவார்கள். பாடசாலைக்குள் இந்த புத்தகங்கள் கொண்டு வர கூடாது என்று தடைச்சட்டம் கூட இருக்குது. அதை மீறி ரகசியமாக கொண்டுவருவதும் அதை நண்பர்களுடன் பரிமாற்றி கொள்வதும் மாயாவி கதையை விட சுவாரசியமாக இருக்கும். சில நண்பர்கள் இந்த புத்தகங்களை வாடகைக்கும் விடுவார்கள். வாடகை இரண்டு ஸ்திக்கெர்கலாகவொ அல்லது வேறு பண்ட மாற்று பொருளாகவோ இருக்கும். ரெக்ஸ் , ரேயான் என்று வேறு பாத்திரங்கள் இருந்தாலும் மாயாவிக்கு தான் அதிகம் மவுசு இருந்திருக்கிறது..சில மாயாவி புத்தகங்கள் ஐந்து ச்டிக்கேர் வரை விலை போயிருக்கின்றன. சில சமயங்களில் டீசெரோ , மாணவர் தலைவர்களோ இந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களை கண்டு பிடித்து கிழிக்கும் சம்பவங்களும் நடந்திருக்கின்றன. ஒரு நாள் நண்பன் ஒருவனின் நான்கு புத்தகங்களை மாணவ தலைவர் கிழித்து விட்டதால் அவன் நாள் முழுக்க அழுது கொண்டு இருந்தான். நாங்கள் எல்லாம் பொய் ஆறுதல் கூறினோம். பின்னர் ஒரு காலத்தில் வகுப்பறை நூலகம் என்று ஒரு நடைமுறை வந்த போது எங்கள் வகுப்பு அலுமாரியில் நிறையவே ராணி கொமிக்ஸ் புத்தகங்களும் ஒரு சில பாரதியார் , ராமகிருஸ்னர் புத்தகங்களுமே இருந்தன.









இப்படி சில காலங்கள் அறுபது எழுவது பக்கங்களுடன் வந்த ராணி கொமிக்ஸ் புத்தகங்களும் முகமூடி வீரர் மாயாவியின் வீர சாகசங்களும் பெரிய தாக்கத்தையே ஏற்படுத்தி விட்டிருந்தன. இன்றைக்கு வாசிக்கும் சுஜாதாக்களுக்கும் , ராபின் ஷர்மாக்களுக்குமான ஆரம்பம் இது போன்ற மயாவிக்கள் வாழ்ந்த கொமிக்ஸ் புத்தகங்களால் தான் ஏற்படுத்த பட்டிருக்கிறது என்பதை எத்தனை பேர் நினைத்து பார்க்கிறோம்.?

அட இப்படியும் திருமண அழைப்பிதலா?

Tuesday, July 14, 2009

"யாமம்" ஏற்படுத்திய தாக்கம்


நாவல் என்றால் எப்போதுமே ஒரே மூச்சில் படித்து முடித்துவிட வேண்டும் என்ற எண்ணம் எஸ். ராமகிருஷ்ணனின் இந்த நாவல் படித்து முடித்தவுடன் நிறையவே வலுப்பெற்றிருக்கிறது. முன்னர் கூட இவரின் ஊறுபசி என்ற நாவல் படித்திருக்கிறேன். அது பக்கங்கள் எண்ணிக்கையில் குறைவு என்பதால் ஒரு நாளில் படித்து முடிக்க கூடியதாக இருந்தது. அதில் சம்பத் என்ற கதாபாத்திரம் ஏற்படுத்திய துயரம் பல நாள் வரையில் மனதில் ஓட்டிக்கொண்டு இருந்தது. அதன் பின்னரே சிறுகதைகள் கட்டுரைகள் தாண்டி நாவல்கள் மீதும் ஆர்வம் பற்றிக்கொண்டது.

அந்த வகையில் இந்த யாமம் என்கிற நாவலின் ஆரம்பம் பெரிதாக கவரவில்லை என்பதால் , சில நாட்களில் ஓரிரெண்டு பக்கங்கள் கூட தாண்டுவதில்லை. இப்படி பல நாட்கள் வாசித்தும் நூறு பக்கங்கள் தாண்டாத புத்தகத்தை ஒரு நிறைந்த பௌர்ணமி தினத்தில் , முற்றிலுமான ஒரு லீவு நாளில் முடியும் வரை வாசித்த போது தான் அதன் சுவையும், கதாபத்திரங்களின் வலியும் சேர்ந்து நிறைவை தந்தது.

கதையும் அதற்கான சம்பவங்களும் ஆயிரத்து என்னூராம் ஆண்டுகளில் நடப்பதாக அமைந்திருக்கிறது. நான்கு கதைகள் தனித்தனியே நடந்தாலும் யாமம் என்ற வாசனை திரவியத்தால் ஒன்றாக பிணைக்கப்படுகின்றன. வாசித்து முடித்தபின் கதையில் வந்த சில சம்பவங்கள் உண்மை போன்று தோன்றியதால் , இணையத்தில் தகவல் தேடினேன் , சில ஆங்கில ஆளுநர்களில் பெயர்கள், விக்டோரியா மகராணி பற்றிய தகவல்கள் ,ஆயிரத்து எண்ணூற்று எண்பத்து நாளில் மதராஸ் பட்டணத்தில் காலரா வந்தது பலர் இறந்து போனது , அந்த காலராவை தடுக்க ஆங்கிலேய ஆளுனரால் வெளியிடப்பட்ட ஹன்சாட் அறிக்கை என்பன கதையோடு நிறையவே ஒத்து பெரும் வந்த நிறைய சம்பவங்கள் இணையத்தில் கொட்டிக் கிடந்தமை நிறையவே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அன்றைய நாளின் வாழ்கை முறையும், எதிர்பார்ப்புக்கள், ஏக்கங்களை வலியோடு சொல்லிமுடித்து யாமம்.

"எண்ணற்ற உள் மடிப்புகள் கொண்ட இரவாகவும் அற்புத த்தின் தீராத வாசனையாகவும் உருக்கொள்ளும் யாமம் பல நூறு ஆண்டுகளின் சரித்திரத்தின் வழியே மனித அந்தரங்கத்தின் புதிர் மிகுந்த கதையினை எழுதுகிறது. கீழத்தேய மரபின் வினோதங்கள் மிகுந்த ரகசியங்களும் மேற்குலகின் நவீனத்துவ நீரோட்டமும் ஒன்றையொன்று கடந்து செல்லும் ஒரு காலகட்டத்தை பின் புலமாகக் கொண்ட இந்நாவல் யதார்த்தம் புனைவு என்ற எல்லைகளைக் கடந்து கவித்துவத்தின் அதீத மன எழுச்சியை உருவாக்குவதுடன் அழிவுகள், வீழ்ச்சிகளுக்கு இடையேயும் பெருகும் வாழ்வின் பரவசங்களையும் மகத்துவங்களையும் விவரிக்கிறது.
வெளியீடு ; உயிர்மை பதிப்பகம"






Sunday, July 5, 2009

"Warren Buffett" டால் எப்படி முடிந்தது.


அண்மையில் வாசித்து முடித்த புத்தகம் இது. மிகவும் பயனுள்ள புத்தகமும் கூட. புத்தகம் என்பது ஒருவருடைய அனுபவங்களை சாரமாக தருகிறது. அந்த வகையில் இந்த புத்தகம் உலகளாவிய பங்குச் சந்தையில் குருவாக கருதப்ப்படும் "Warren Buffett" டின் வெற்றியின் ரகசியங்களையும், அவரால் எப்படி சரியாக பங்குகளை தெரிவுசெய்து மிகப்பெரிய இலாபம் உழைக்க முடிந்தது என்பதற்கான இருபது மூன்று இலகுவான சூட்சுமங்களை இலக்கு நடையில் விபரிக்கிறது இந்த புத்தகம். "Warren Buffett" கனவுகளுடன் திரிபவர்களுக்காக தமிழாக்கி தருகிறேன்.


  1. உங்கள் தெரிவு இலகுவானதாக இருக்கட்டும் , கடினமானதை தவிருங்கள்.
  2. உங்களுக்கான முதலீட்டு முடிவுகளை நீங்களே எடுங்கள்.
  3. மிகச் சரியாக திட்டமிடுங்கள் .
  4. பொறுமையாக இருங்கள்.
  5. பங்குகளை வாங்காதீர்கள்..வணிகத்தை வாங்குங்கள்.
  6. பல் தேசிய கம்பனிகளை கூர்ந்து கவனியுங்கள்
  7. அதிக தொழில்நுட்பத்தை விட குறைந்த தொழில்நுட்பத்தையே தெரிந்தெடுங்கள்.
  8. உங்கள் தெரிவுகளில் மட்டும் அதிகம் கவனம் செலுத்துங்கள்.
  9. எப்போதும் செயட்பட்டுக்கொண்டு இருக்க வேண்டும் என்று எதிர்பார்கதீர்கள்.
  10. விலையில் மட்டுமே கவனம் கொள்ளாதீர்கள்
  11. பங்குச் சந்தையின் சரிவுகளை முதலீட்டுக்கான வாய்ப்பாக கருதுங்கள் .
  12. இருப்பதில் வித்தியாசம் ஆனதையே தெரிவு செய்யுங்கள்
  13. பேரண்ட காரணிகளில் (Macro Factors) கவனம் கொள்ளாது , சிற்றின காரணிகளில் (Micro Factors) கவனம் கொள்ளுங்கள்.
  14. கம்பனியின் முகாமைத்துவத்தையும் , முகாமையாளர்களையும் கணக்கில் கொள்ளுங்கள்.
  15. சுயாதீனமாக சிந்தியுங்கள், யாரையும் நம்பாதீர்.
  16. உங்களுக்கு வசதியான வட்டத்துக்குள் மட்டும் நில்லுங்கள்.
  17. பங்குச் சந்தை எதிர்வு கூறல்களை தவிருங்கள்.
  18. சந்தை பற்றியும் அதில் உள்ள அபாயம் பற்றியும் விழிப்பாக இருங்கள்.
  19. மற்றவர்கள் பயப்படும் பொது நீங்கள் துணியுங்கள், மற்றவர்கள் துணியும் பொது நீங்கள் அமைத்து பேணுங்கள்.
  20. வாசியுங்கள், வாசியுங்கள்..வாசித்த பின் யோசியுங்கள்.
  21. உங்களால் முடியுமானவரை உங்கள் சக்தியை பாவியுங்கள்
  22. அடுத்தவரின் விலை மதிப்பான தவறுகளை தவிருங்கள்.
  23. உறுதியான முதலீட்டாளராக உங்களை நம்புங்கள்.
 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes