BREAKING NEWS

Like Us

Sunday, November 23, 2008

வாரணம் ஆயிரம்




எப்போதுமே சூரியா படம் மனதுக்கு பிடித்தமான ஒன்று என்ற எனது முன்மதிப்புக்களை இந்த தடவையும் காப்பாத்தி இருக்கிறார் சூரியா. அருமையான தத்துவங்கள், சுய மனித ஒழுக்கங்களை கோடிட்டு காடும் ஒரு படம். சூரியாவுக்கு நடிப்பில் வெள்ளுதுக்கட்ட அருமையான வாய்ப்பு . சிறப்பாகவே வெற்றிபெற்று இருக்கிறார். அவர் தவிர ஏனைய பாத்திரங்கள் முக்கியப்படுத்தவில்லை. நடிகைகள் தொடர்பில் என் ரசனை மட்டம் பெரிதும் விலகியே இருக்கிறது. சூரியா தவிர இசையும் கமெராவும் மட்டுமே கூடுதல் பலம். ஏற்கனகே மீடியாக்களில் விளம்பரப்படுத்தபட்டத்தை போல, தன் படம் என்பதை கெளதம் மேனன் சொல்லியே தெரிய வேண்டி இருக்கிறது. முன்னைய படங்களில் இருந்து சற்றே குறைந்திருக்கிறது அவருடைய , அவருக்கு மட்டுமேயான சில பல விடயங்கள். தவிரவும் திரைகதையில் இருக்கும் எதோ ஒரு தொய்வை அழகான காட்சிப்படுத்தல்கள் மட்டுமே சரி செய்கிறது. கிளை கதைகளில் கதைசொல்லும் உத்தி எவ்வளவு தூரம் வெற்றி பெற்றிருக்கிறது எண்டு எனக்கு சொல்ல தெரியவில்லை ஆயினும் இரட்டை வேடத்தின் குழப்பத்தையும் சிரமத்தையும் தவிர்க்க கமரவையே ஒரு பாத்திரமாக்கியது ரசிக்கவே செய்கிறது. சிறுவன் கடத்தல், தீவிவாதிகளுடன் சண்டை என்பன தேவையற்ற திணிப்புக்கள், சேரன் பாணியில் மென்மையாகவே கதையயை நகர்த்தியிருக்க சம்பவங்களை தீட்டியிருக்கலாம். எல்லாம் தவிர்த்து பார்த்தால் நீண்ட காலத்துக்கு பிறகு வந்த வர்ணம் நிறைந்த ஒரு சினிமா இந்த வாரணம் ஆயிரம்.

Share this:

Anonymous said...

கௌதம் வாசுதேவ் மேனனின் ’ வாரணம் ஆயிரம் ’ படத்தைச் சற்று கூடுதல் எதிர்பார்ப்புடனேயே சென்று பார்த்தேன். காரணம், இவரது முந்தைய படங்களான மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பச்சைக்கிளி முத்துச் சரம் ஆகிய நான்குமே ஜனரஞ்சக சினிமாவில் மிக வித்தியாசமான அனுபவத்தைக் கொடுத்திருந்தன. அதிலும் பச்சைக்கிளி முத்துச் சரம் ஏனையவற்றிலும் விசேஷமானது.

எதிர்பார்த்தது போலவே கௌதம் மேனனின் (தமிழ் நாட்டில் சாதிப் பெயர்களை பெயரோடு சேர்த்துக் கொள்ளும் வழக்கமில்லை என்பதைத் தனது படங்களுக்கு அருமையான தலைப்புகளைச் சூட்டும் கௌதம் கவனிக்க வேண்டும்) முந்தைய படங்களை விட கலையம்சமும், சிருஷ்டித்துவமும் கூடிய படம் வாரணம் ஆயிரம்.

ஆனால் படத்தின் மிக முக்கியமான குறை, பார்வையாளர்கள் பலரும் உணர்ந்தபடியே இடைவேளையோடு படம் முடிந்து விடுகிறது. அப்படி முடிந்திருந்தால் போலிஷ் இயக்குனர் Krzysztof Kieslovsky யின் படத்தைப் பார்த்தது போன்ற ஓர் அபூர்வமான கலா அனுபவத்தைக் கொடுத்திருக்கும். உதாரணமாக, கீஸ்லோவ்ஸ்கியின் ’ மூன்று வண்ணங்கள் ’ (சிவப்பு, நீலம், வெள்ளை) என்ற தலைப்பில் அவர் எடுத்த மூன்று வெவ்வேறு காதல் கதைகளைக் கொண்ட படங்கள் ஞாபகத்துக்கு வருகின்றன. ’ சிவப்பு ’ கதையை மட்டும் சொல்கிறேன். ஒரு இளம் பெண் காரில் வரும்போது ஒரு நாயின் மீது மோதி விடுகிறாள். நாயின் கழுத்துப் பட்டியிலிருந்து அந்த நாயின் உரிமையாளரின் முகவரியை அறிந்து அங்கே செல்கிறாள். நாயின் உரிமையாளர் ஒரு ஓய்வு பெற்ற நீதிபதி. அவர் தனது தனிமையிலிருந்து விடுபடுவதற்காக அவரது அக்கம் பக்கத்தினர் தொலைபேசியின் மூலம் பேசுவதை ஒட்டுக் கேட்பதை அறிந்து அதிர்ந்து போகிறாள். பிறகு அவளுக்கும் அந்த வயதான நீதிபதிக்கும் ஏற்படும் காதலைச் சொல்கிறது படம்.

கீஸ்லோவ்ஸ்கியின் அந்த மூன்று படங்களுமே ஒவ்வொன்றும் சுமார் ஒன்றரை மணி நேரம் கொண்டவை. அதே போல் கௌதம் மேனனின் வாரணம் ஆயிரமும் மூன்று வெவ்வேறு கதையைக் கொண்டதாக இருந்தாலும் அதை ஒரே படமாக மூன்று மணி நேரத்தில் கொடுத்திருப்பதால், இடைவேளை வரை வரும் முதல் கதையின் தீவிரமும் உக்கிரமும் அதற்குப் பிறகு வரும் அடுத்த கதையினால் வலுவிழந்து விடுகிறது; அல்லது, பார்வையாளர்களிடம் ஏற்படுத்திய தாக்கத்தைத் திசை திருப்பி விடுகிறது.

Anonymous said...

முதல் கதை, சூர்யாவுக்கும் மேக்னாவுக்குமான காதல். சூர்யா ஒரு நடுத்தர வர்க்கத்துக் கல்லூரி மாணவன். படிப்பில் அவ்வளவு ஈடுபாடு இல்லாமல், கிதாரும் இசையுமாக வாழ்பவன். அவன் ஒருநாள் ரயிலில் மேக்நாவைச் சந்திக்கிறான். கண்டதுமே காதல். ஆனால் அதை அவன் தெரிவிக்கும் விதமும் அதன் தொடர்ச்சியான அவர்களுடைய சந்திப்புகளும் இன்றைய இளைஞர்களின் வாழ்வையும், அவர்களது காலகட்டத்தையும் வெகு துல்லியமாய்ப் பிரதிபலிக்கின்றன.

’ கண்டதுமே காதலா? என்னைப் பற்றி உனக்கு என்ன தெரியும்? காதல் வர வேண்டுமானால் நாம் ஒருவருக்கொருவர் பழகி, ஒருவரையொருவர் புரிந்து கொள்ள வேண்டாமா? உனக்கு என்னைப் பார்த்து ஏற்பட்டிருக்கும் உணர்வு காதல் அல்ல; காமம் ’ என்கிறாள் அவள்.

அதை அப்போது மறுக்கும் சூர்யா, தன்னுடைய காதல் உண்மை என்றும், அவளை நிச்சயம் மீண்டும் சந்திப்பதாகவும் சொல்லிச் செல்கிறான். சொன்னது போலவே அவளைச் சந்திக்கிறான். ஆனால் இப்படி இவன் தன் முன்னே வந்து நிற்பான் என்று அவள் எதிர்பார்க்கவில்லை. அவளோடு பழக ஆர்வமாக இருக்கிறான் சூர்யா. ஆனால் அவளால் அவனோடு ஒரு காஃபி ஷாப்புக்குக் கூட வர முடியாத நிலை. ஏனென்றால் அவள் மேல் படிப்புக்காக இன்னும் ஒரே வாரத்தில் அமெரிக்கா செல்கிறாள். ஆக, வெறும் இரண்டே சந்திப்புகள். இருந்தாலும் அவள்தான் தன்னுடைய மனுஷி என்பதில் உறுதியாக இருக்கிறான் சூர்யா.

மேக்நாவைப் பார்ப்பதற்காக சூர்யாவும் அமெரிக்கா செல்கிறான். அங்கே அவளுடைய அறையிலேயே மூன்று மாதம் தங்குகிறான். ரயிலில் முதல் சந்திப்பிலேயே தன் காதலை மேக்நாவிடம் தெரிவித்து விட்ட சூர்யா அவளோடு ஒரு நண்பனைப் போலவே பழகுகிறான்; அவளுடைய அறையிலேயே மூன்று மாதங்கள் தங்குகிறான். ஒரு கட்டத்தில் மேக்நாவுக்கும் தான் அவனைக் காதலிப்பதாகத் தோன்றுகிறது. அந்தக் காதலை அவள் அவனிடம் தெரிவிக்கும் போது அதற்குப் பிறகு அவனால் அவளோடு ஒரே அறையில் இயல்பாகத் தங்க முடிவதில்லை.

பிறகு, மேக்நா அமெரிக்காவுக்கு எதிரான தீவிரவாதிகளின் தாக்குதல் ஒன்றில் இறந்து போகிறாள்.

Anonymous said...

இது ஒரு கதை. காவிய நயத்துடன் கூடிய இந்தக் கதை தமிழ் சினிமாவில் இதுவரை சொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான காதல் கதைகளில் மிகவும் புதிதானது.

சினிமா என்பது வெறும் கற்பனை, ஃபாண்டஸி என்பதையெல்லாம் மறுத்து வாழ்வோடு மிகவும் நெருக்கமானது என்பதை உணர்த்தும் காதல் கதை வாரணம் ஆயிரம். சமீபத்திய தமிழ் சினிமாவில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்திற்கேற்ப இந்தக் காதல் கதையின் வசனங்களும் இலக்கிய நயம் பொருந்தியவையாகவே அமைந்துள்ளன. இதற்குக் காரணம் இயக்குனரின் கலாச்சார நுண்ணுணர்வு.

பொதுவாக தமிழ்ப் படங்களில் காதலன் காதலிக்கு ஒரு பொம்மையைத்தான் பரிசாக அளிப்பது வழக்கம். அப்படியே ஒரு புத்தகத்தைப் பரிசளிப்பதாக இருந்தாலும் அந்தப் புத்தகம் ஒரு பால குமாரனின் புத்தகமாகவோ அல்லது ரமணி சந்திரனின் புத்தகமாகவோதான் இருக்கும். ஆனால் இந்தப் படத்திலோ காதலி தன் காதலனுக்கு ஒரு உலகப் புகழ் பெற்ற ஆங்கிலப் புத்தகத்தைப் பரிசளிக்கிறாள். அந்தப் புத்தகம் Richard Bach எழுதிய Illusions .

மேக்நாவின் இழப்பினால் போதை மருந்துக்கு அடிமையாகும் சூர்யா பிறகு தன் தந்தையின் அன்பினால் அதிலிருந்து விடுபடுவதும், வேறொரு பெண்ணைக் காதலித்து மணந்து கொள்வதும் மற்ற இரண்டு கதைகள்.

தமிழில் எனக்குத் தெரிந்து தந்தைக்கும் மகனுக்குமான உறவுப் பிணைப்பை அடிப்படையாகக் கொண்டு வந்த படங்கள் என எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. தேவர் மகனில் அது ஒரு சிறு கீற்றாக வெளிப்படும். ஆனால் வாரணம் ஆயிரம் படத்தில் அதன் ஆதார சுருதியாக, ஒரு பிரதான கதையாகச் சொல்லப் பட்டிருக்கிறது இந்தத் தந்தை மகன் உறவு. ஒரு சிறுவனுக்கு அவனுடைய தந்தையே அவன் பார்க்கும் முதல் ஹீரோவாகவும், அவனுடைய ஆளுமையை உருவாக்கும் ஆதர்ச மனிதனாகவும் விளங்குகிறான். இந்த உறவுப் பிணைப்பை வெகு அற்புதமாகக் காட்சிப் படுத்தியிருக்கிறார் இயக்குனர்.

வாரணம் ஆயிரத்தைக் காண நேரும் ஒவ்வொரு தகப்பனுக்கும், ஒவ்வொரு தனயனுக்கும் மிக நீண்ட காலத்துக்கு இப்படத்தின் தாக்கம் நீடிக்கும் என்று சொல்லலாம். கௌதம் இந்தப் படத்தைத் தனது தந்தைக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார். தனது தந்தையுடனான அவரது சொந்த அனுபவமே இந்தக் கதை என்றும் கூறியிருக்கிறார். தமிழில் தனது சொந்த அனுபவத்தை அடிப்படையாக வைத்து சினிமாவை உருவாக்குபவர்கள் அதை வெளிப்படையாகச் சொல்லிக் கொள்வதில்லை. காரணம், எவ்வளவோ இருக்கலாம். ஆண் பெண் உறவை மட்டுமே நாம் அனுபவம் என்று கருதுவதும் ஒரு காரணம். கௌதம் இவ்வித மனத்தடைகளைத் தாண்டியிருக்கிறார். வாரணம் ஆயிரம் மற்ற படங்களிலிருந்து வேறுபட்டிருப்பதற்குக் காரணம் இது ஒரு Personal film- ஆக உருவாக்கப் பட்டிருப்பதுதான். சுயசரிதைத்தன்மை கொண்ட ஒரு படைப்பிற்கும், பொதுவாக நாம் கண்டு அனுபவித்த சம்பவங்களைச் சித்தரிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. இரண்டையும் Personal film என்ற வகைப்பாட்டுக்குள் அடக்க முடியாது. வாரணம் ஆயிரம் ஒரு பார்வையாளரோடு கொள்ளும் உறவு இந்த வகையில் மிகவும் அந்தரங்கமாக இருக்கிறது.

அந்தரங்கமான அனுபவம் எவ்வளவு தூரம் நம்பகத்தன்மை ( authenticity) கொண்டிருக்கிறதோ அந்த அளவுக்கு அது ஒரு கலா சிருஷ்டியாக மேன்மையுறுகிறது. வாரணம் ஆயிரத்தில் முதல் பாதியில் இருந்த நம்பகத்தன்மையை இயக்குனரே படத்தின் பிற்பாதியில் காலி செய்து விடுகிறார். சூர்யா திடீரென்று ராணுவத்தில் சேர்வது, தனது நண்பர் ஒருவரின் குழந்தை கடத்தப்படும்போது அதை ஒரே ஆளாகப் போய் மீட்டு வருவது என்ற இரண்டு விவரணைகளே அவை. இந்தப் படத்தில் வருவது போல் அவ்வளவு சுலபமாக எல்லாம் ராணுவத்தில் சேர்ந்து, அதிலும் ’ மேஜர் ’ அளவுக்கெல்லாம் உயர்ந்து விட முடியாது. ராணுவத்தில் சேர வயது வரம்பெல்லாம் கிடையாதா? அதிலும் ராணுவத்தில் சேர்ந்தவுடன் போருக்குச் செல்வதெல்லாம் அர்ஜுன் போன்ற தேச பக்தித் திலகங்களின் படத்தில் மட்டுமே பார்க்க முடியும். குழந்தையை மீட்கும் காட்சி ஒரு WWF போலிச் சண்டையைப் பார்ப்பது மாதிரிதான் இருக்கிறது. படத்தின் முதல் பாதியின் அற்புதத்துக்கும் இந்த மசாலா செயற்கைத்தனத்துக்கும் சம்பந்தமே இல்லை.

இந்த இடத்தில் குறிப்பிடப்பட வேண்டிய மற்றொரு விஷயம், குழந்தையைக் கடத்தி மூன்று கோடி ரூபாய் கேட்பவனின் பெயர் ஆஸாத். இவனைத் தேடிச் செல்லும் போது சூர்யா சந்திக்கும் மற்றொரு கிரிமினலின் பெயர் டப்பு மாலிக். இந்த இரண்டு பெயர்களும் ஏதோ சந்தர்ப்பவசமாக வைக்கப் பட்டதல்ல. மிகத் தெளிவாக யோசித்து, திட்டமிட்டு வைக்கப்பட்டுள்ள பெயர்கள். ஏனென்றால், சூர்யா டப்பு மாலிக்கையும், ஆஸாதையும் தேடிச் செல்லும் இடங்கள் புராணா தில்லி என்று அழைக்கப்படும் பழைய தில்லி. இன்னும் வளர்ச்சி அடையாத, அரசாங்கத்தின் கருணைப் பார்வை படாத பகுதி. முஸ்லீம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி. பார்வையாளர்களுக்கு இன்னும் சரியாகப் புரியாமல் போய் விடப் போகிறதே என்ற கவலையில் இயக்குனர் இன்னொரு விஷயத்தையும் சேர்த்திருக்கிறார். அதாவது, சூர்யா மாலிக்கையும், ஆஸாதையும் தேடிச் செல்லும் போது பாங்கு வேறு ஒலிக்கிறது. போதுமா?

ஏன் ஐயா, குழந்தைகளைக் கடத்துபவர்கள் முஸ்லீம்களாகத்தான் இருக்க வேண்டுமா? ஏற்கனவே கௌதம் மேனனின் வேட்டையாடு விளையாடு படத்தில் வரும் இரண்டு ஹொமோசெக்‌ஷுவல்கள் குழந்தைகளைக் கற்பழிக்கிறார்கள்; கொலை செய்கிறார்கள். ஹோமோசெக்‌ஷுவல் என்றால் இப்படித்தான் கிரிமினலாக இருப்பான் என்ற பொதுப் புத்தியே இந்த இடத்தில் செயல்பட்டிருக்கிறது. அது போதாது என்று அந்த இரண்டு கிரிமினல்களின் பெயர் அமுதன், இளமாறன். அதாவது, இழந்து போன தமிழ் அடையாளத்தைப் பற்றிப் பேசுபவர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்ற பொதுப் புத்தி.

பொதுவாகவே, சட்டத்துக்குப் புறம்பான குற்றச் செயல்களைப் புரிபவர்கள் சமூகத்தால் புறக்கணிக்கப் பட்டவர்களாகவும், தலித்துகளாகவும், முஸ்லீம்களாகவும், விளிம்பு நிலை மக்களாகவுமே ஜனரஞ்சக ஊடகங்களில் சித்தரிக்கப்பட்டு வருகிறார்கள்.இது ஏற்கனவே ஒடுக்கப்பட்ட நிலையில் வாழும் மக்களின் மீது தொடுக்கப்படும் அதிக பட்சமான கருத்தியல் வன்முறையாகும். உடனடியாக இந்தப் படத்திலிருந்து இப்பகுதிகள் நீக்கப்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.

படத்தின் மிக மோசமான அம்சம், சூர்யாவின் அப்பா கிருஷ்ணனும் மாலினியும் (சிம்ரன்) கல்லூரி மாணவர்களாகச் சந்தித்துக் கொள்வதும், காதலிப்பதுமான காட்சிகள்தான். இந்தக் காட்சியில் பார்வையாளர்கள் வாய் விட்டுச் சிரிப்பதைக் காண முடிந்தது. காரணம், இந்தக் காட்சியில் சிம்ரன் சூர்யாவுக்கு அக்கா மாதிரியோ, அம்மா மாதிரியோ கூட இல்லை; பாட்டி மாதிரி இருக்கிறார். ஒரு பாட்டியும் இளைஞனும் காதலித்தால் சிரிப்புதானே வரும்? பார்க்கவே சகிக்க முடியாத காட்சி இது. உதாரணமாக, நூலகத்தில் சந்தித்துக் கொள்வது. ஆனால் சூர்யா பள்ளிக்கூட மாணவனாக வரும்போது வெகு இயல்பாக இருக்கிறார். அவருடைய கடுமையான உழைப்புக்கு (உபவாசத்துக்கு) ஒரு பாராட்டு. தவிரவும் நடிப்பில் சூர்யா இந்தப் படத்தில் உச்சங்களைத் தொட்டிருக்கிறார். பள்ளி மாணவனாகவும், பிறகு மேக்நா இறந்தவுடன் போதை மருந்து அடிமையாகவும் அவரது நடிப்பு தமிழ் சினிமாவில் நீண்ட காலத்துக்கு நினைவில் இருக்கும்.

படத்தின் விசேஷமான அம்சங்களில் ஒன்று, இதன் வசனம் என்று குறிப்பிட்டேன். ஆனால் அந்த வசனங்களெல்லாம் ஆங்கிலத்தில் வருகின்றன. சூர்யா மேக்நாவிடம் கூறுகிறான்: “I will come into your life and sweep you off your feet.” வாரணம் ஆயிரம் என்று பெயர் வைத்தவருக்கு இந்த அருமையான வாசகத்தைத் தமிழில் எப்படிச் சொல்லலாம் என்றா தெரியாமல் போய் விட்டது? என்னதான் கௌதமின் சுயசரிதைத் தன்மை கொண்ட படமாக இருந்தாலும் அவரைப் போலவே அவரது கதாபாத்திரங்களும் ஆங்கிலத்திலேயே பேசிக் கொள்ள வேண்டுமா என்ன? சூர்யாவின் அப்பா கிருஷ்ணன் ஒரு மத்திய அரசாங்க ஊழியர். அவர் தன் மகனுக்கு ஆங்கிலத்தில்தான் கடிதம் எழுதுவாரா? மூகாம்பிகை எஞ்சினியரிங் கல்லூரியில் படிக்க்கும் ஒருவன் – அதிலும் ’ அரியர்ஸ் ’ வைத்திருப்பவன் – அப்படி ஒரு மேல்தட்டு வர்க்கத்தைச் சேர்ந்தவனைப் போலவா ஆங்கிலம் பேசுவான்?

***

Anonymous said...

இன்றைய தமிழ் சினிமாப் பாடல்கள் மிகவும் சீரழிந்த நிலையில் இருந்து வருகின்றன. வெறும் ஐம்பது வார்த்தைகளை மட்டுமே வைத்துக் கொண்டு ஜிம்கா வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் சினிமா பாடல் ஆசிரியர்கள். இசையோ உலகத் தரம். அதன் பாடல் வரிகளோ குப்பை. இதுதான் இன்றைய தமிழ் சினிமாப் பாடல்களின் நிலை. ஆனால் வாரணம் ஆயிரத்தில் இசையும் பாடல்களும் தமிழ் சினிமா இசையில் மீண்டும் ஒரு மறுமலர்ச்சிக்கு வித்திட்டிருக்கின்றன. தாமரையின் பாடல் வரிகளில் கவித்துவம் கொஞ்சுகிறது; குறிப்பாக, நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை, முன் தினம். கண்ணதாசன், வைரமுத்து இருவருக்கும் அடுத்தபடியாக அந்த இடம் வெற்றிடமாகவே இருந்தது. அந்த இடம் தாமரைக்குக் கிடைத்து விட்டது என்று சொல்லலாம்.

ஹாரிஸ் ஜெயராஜ் : பாராட்ட வார்த்தைகளே இல்லை. தனது இசையால் இளைஞர்களைப் பைத்தியம் பிடிக்கச் செய்து விட்டார். இந்தப் படத்தின் பாடல் ஆல்பம் உலகின் சிறந்த பாப் இசை ஆல்பங்களுக்கு ஈடானது. அதிலும் அந்த அடியே கொல்லுதே என்ற பாடல் ... தமிழில் இப்படி வருவது அபூர்வம். இந்தப் பாடலைப் பாடியிருக்கும் ஷ்ருதி ஹாஸனுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருப்பது தெரிகிறது. இவரது குரலில் லெபனானைச் சேர்ந்த அரபிப் பாடகியான Nancy Ajram இடம் உள்ள passion தெரிகிறது. இவர் வெறுமனே தமிழ், இந்தி சினிமாப் பாடல்களுக்குப் பாடுவதோடு நிறுத்தி விடக் கூடாது. அதற்கு மேலும் செல்ல வேண்டும்.

இந்தப் படத்தில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மற்றொருவர் இதன் கதாநாயகி ஸமீரா ரெட்டி. இவர் நடித்த முதல் படமான கால்புருஷ் வங்காள இயக்குனர் புத்ததேவ் தாஸ் குப்தாவின் இயக்கத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்து உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் இவரது பாத்திரமும், நடிப்பும் சிலாகிக்கப் பட்டது. இந்தப் படத்திலும் இவரது நடிப்பு தமிழுக்குப் புதிது. ஆனால் விரைவிலேயே தமிழ் சினிமாவின் குத்து டான்ஸுக்கு இடுப்பை ஆட்டும் நடிகையாக மாறி விடாமல் இவர் தன்னைத் தற்காத்துக் கொள்ள வேண்டும்.

***

மொத்தத்தில் கௌதம் மேனனின் வாரணம் ஆயிரம் ஓர் இனிய அனுபவம்.

 
Back To Top
Copyright © 2014 Harans. Designed by OddThemes